/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சுயமரியாதையாக வாழ டீக்கடை திறந்த திருநங்கை
/
சுயமரியாதையாக வாழ டீக்கடை திறந்த திருநங்கை
ADDED : பிப் 15, 2026 06:24 AM

--நமது நிருபர்- -
திருநங்கை என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள்; சாலையோரம் நின்று பிச்சை எடுப்பவர்கள் என்று பெயர் எடுத்து உள்ளனர். ஆனாலும், சில திருநங்கையர் சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதற்காக வேலைக்கு செல்கின்றனர். சொந்தமாக ஏதாவது தொழில் செய்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் அனி, 35. மங்களூரு டவுன் பம்ப்வெல் சதுக்கத்தில் நடமாடும் டீக்கடை திறந்துள்ளார்.
இதுகுறித்து அனி கூறியதாவது:
ஆணாக பிறந்த நான், குழந்தை பருவத்தில் குடும்ப வறுமை காரணமாக நிறைய சவால்களை எதிர்கொண்டேன். பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் என் பெற்றோர் இருந்தனர். ஆனாலும், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு இருந்தது. எனக்கு, 15 வயதான போது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். பெண்ணாக மாறிய பின், பாலியல் தொழிலில் ஈடுபடாமல், சுயமாக சம்பாதித்து வாழ வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சில சங்கங்களின் உதவியுடன் கடன் பெற்று நான்கு ஆட்டோக்கள் வாங்கினேன். ஆட்டோக்களுக்கு டிரைவர்களை நியமித்து, அவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்குவதுடன், கர்ப்பிணியர், முதியவர்கள், திருநங்கையர் பயணிக்கும் போது, பணம் வாங்க வேண்டாம் என்று டிரைவர்களிடம் கூறியுள்ளேன்.
வயதான திருநங்கையர் தங்கும் வகையில் முதியோர் இல்லத்தை தொடங்க வேண்டும் என்பது, என் கனவாக உள்ளது. தற்போது நடமாடும் டீக்கடை துவக்கி உள்ளேன். திருநங்கையருக்கு உத்வேகம், தன்னம்பிக்கை வழங்குவதற்கு முன்மாதிரியாக இந்த கடை உள்ளது. திருநங்கையருக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

