/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் வாலிபர் விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் வாலிபர் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் வாலிபர் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிளில் வாலிபர் விழிப்புணர்வு
ADDED : ஏப் 19, 2025 11:02 PM

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கை வளங்களை பாதுகாத்து, நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வது. காற்று மாசடைவதை தடுப்பது; பல்லுயிர் பாதுகாப்பு; காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களுக்கு தீர்வு வழங்குகிறது. ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த முயற்சியும் செய்வது இல்லை.
கட்டடங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக, மரங்கள் எக்கசக்கமாக வெட்டப்பட்டு வருகின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் வாலிபர் ஒருவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
கலெக்டர்கள் ஆதரவு
துமகூரு டவுனை சேர்ந்தவர் மகாலிங்கா, 28. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களுக்கும், சைக்கிளில் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.
அதன்படி கடந்த 2ம் தேதி துமகூரு கலெக்டர் சுபா கல்யாணை சந்தித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க விருப்பப்படுகிறேன் என்று கோரிக்கை கடிதம் கொடுத்தார். அங்கிருந்து சைக்கிள் பயணத்தை துவங்கினார். சித்ரதுர்கா, ஹாவேரி, தார்வாட் வழியாக தற்போது பெலகாவியை அடைந்து உள்ளார்.
5,500 கி.மீ.,
இதுகுறித்து மகாலிங்கா கூறியதாவது:
மாநிலத்தின் 31 மாவட்ட கலெக்டர்களையும் சந்தித்து, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஐந்து முதல் பத்து ஏக்கரில் சிறிய வனப்பகுதி, பறவைகள் சரணாலயம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடிவு செய்தேன்.
துமகூரு, சித்ரதுர்கா, ஹாவேரி, தார்வாட், பெலகாவி கலெக்டர்களை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறேன். உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ளனர்.
கடந்த 2021ல், 31 மாவட்டங்களுக்கும் சைக்கிளில் சென்று அரசு பள்ளி வளாகங்களில் மரக்கன்று நடும் பிரசாரத்தை துவக்கி வைத்தேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நோட்டீஸ்களை அச்சடித்து வழங்கினேன்.
அப்போது 5,500 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்தேன். அந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக, என் பிரசாரத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. ஆனாலும் பல பள்ளி குழந்தைகள் 'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என்று எனக்கு உறுதி அளித்தனர். அது எனக்கு மனநிறைவு தந்தது.
வெயில் காரணமாக தற்போது ஒரு நாளைக்கு 50 கி.மீ., மட்டும் சைக்கிள் ஓட்ட முடிகிறது. இரவில் பெட்ரோல் பங்க், பள்ளி, கோவில்களில் தங்குகிறேன். பணம், சொத்து எளிதில் சம்பாதிக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல், ஆரோக்கியத்தை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம். இதை நாம் யாரும் மறந்து விட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாலிங்காவின் சைக்கிளில் தேசிய, கன்னட கொடிகள், புனித் ராஜ்குமார் நடித்த கந்ததகுடி படத்தின் போஸ்டர், ஒரு கூடை இடம் பெற்றுள்ளது. மகாலிங்காவை பாராட்ட நினைப்போர் 85535 50554 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

