பிபி இருந்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு: உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்!
பிபி இருந்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு: உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்!
UPDATED : ஆக 05, 2023 05:26 PM
ADDED : ஆக 05, 2023 02:17 PM

பிபி எனும் ரத்த அழுத்தம் தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம். ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகள், உப்புக் குறைந்த உணவு, மது, புகையை தவிர்ப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் பக்கவாத பயமின்றி யார் தயவையும் நாடாமல் வாழ்க்கையை வாழலாம்.
ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சுமார் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சகஜமான நிலையில் வாழ்க்கையை நடத்த முடியாது. எனவே பக்கவாதத்தை பொறுத்த வரை வரும் முன் காத்துக்கொள்வதே சிறந்தது.
மூளைக்கு போகும் ரத்தம் தடைப்படும்

பக்கவாதம் ஏற்பட்டால் உடல் சமநிலையை இழக்கும். ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு, முகம் ஒரு புறமாக இழுப்பது, ஒருபக்க கை, கால் செயல்பட இயலாதது, பேச்சில் குளறுதல், இவற்றை உணர்ந்தால் உடனடியாக அருகே இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ, பெரிய மருத்துவமனைக்கோ சென்று விட வேண்டும். சில மணி நேரங்களுக்குள் சென்றால் மூளையை செயல்பட வைக்கும் ஊசி செலுத்தி உடல் குறைபாடுகளின்றி தப்பிக்கலாம். இங்கு காலம் பொன்னானது ஆகும்.
வருமுன் காப்பதே சிறப்பு

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால் சாப்பாட்டில் உப்பை தவிருங்கள், நொறுக்குத் தீனியை விட்டு விடுங்கள், சர்க்கரையை குறைத்துக்கொள்ளுங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள்.
உயர் கொழுப்பு கண்டறியப்பட்டால் ரத்த நாளங்களில் படிந்து, ரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்யும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அசைவ உணவை இரவில் தவிருங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், அளவோடு சாப்பிடுங்கள். கொழுப்பை கரைக்கும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு உட்கொள்ளுங்கள்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் கூடுதல் உள்ளது.
அதே போல் புகைப்பிடித்தல், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்தும், ரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கும், ரத்தத்தின் திரவத் தன்மையை அதிகரிக்கும். எனவே புகைப்பிடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்திவிடுங்கள்.
