ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்
ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதன் அறிகுறிகளும்
UPDATED : ஏப் 02, 2023 02:07 PM
ADDED : ஏப் 02, 2023 02:06 PM

இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். ஆண்டுதோறும் இது ஏப்ரல் 2 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் 2007 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு, 2008 ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism Spectrum Disorder - ASD), அதாவது ஆட்டிசம் என்று அனைவராலும் அறியப்படும் இந்த நோய் எப்பொழுதும் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது. சில நேரங்களில் இந்த நோயின் அறிகுறிகள் குழந்தை பிறந்த முதல் 12 மாதத்திலேயே தெரியும். மேலும் சில நேரங்களில் 24 மாதங்கள் வரை எந்த அறிகுறியும் புலப்படாமல் கூட போகலாம்.
பிறவியிலேயே ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளால், அனைத்து மக்களிடமும் சகஜமாக பழக இயலாது. அவர்களது நடத்தை அவர்களின் வயதை பொருந்தாமல் சிறு பிள்ளையை போல இருக்கும்.

பொதுவாக இந்நோய் மரபியல் மாற்றத்தாலேயே ஏற்படுகிறது. மேலும் பெண் பிள்ளைகளை விட ஆண் குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோயின் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயண மருத்துவ கல்லூரியின் குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் எம்.டி., கூறியதாவது,
இந்நோய் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய சிதைவால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வார். வீட்டில் இருக்கும் சுவிட்ச்களை ஆன் மற்றும் ஆஃப் செய்வது, ஒரே இடத்தில் குதிப்பது, குறிப்பிட்ட இடத்தை சுற்றி ஓடிக்கொண்டே இருப்பது, குறிப்பிட்ட விரல் அசைவுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். மேலும் அவர்களால் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆட்டிசம் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக பெற்றோர்களின் வயது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் பருமன், முந்தைய கர்ப்ப காலத்திற்கான குறுகிய இடைவெளி, கர்ப்ப காலத்தின் போது தாய்க்கு ஏற்படும் வைரஸ் தொற்றுகள் குறிப்பாக ரூபெல்லா மற்றும் சைட்டோமெகளோ வைரஸ் தொற்று ஆகியவை அமைகிறது.
பெரும்பாலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 35% பேருக்கு வலிப்பு நோயின் பாதிப்பு உள்ளது. 20% குழந்தைகளுக்கு மலச்சிக்கல், குடல் சார்ந்த நோய்கள் மற்றும் ஜிஇஆர்டி (GERD) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. 50% குழந்தைகளுக்கு கவனச்சிதறல் போன்ற ஏடிஹச்டி (ADHD) பாதிப்பு ஏற்படுகிறது. 50 முதல் 80 சதவீத குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது.
பொதுவாக குழந்தைகள் இரண்டு மாதங்களில் சிரிக்க தொடங்குகிறது. இது சோசியல் ஸ்மைல் என குறிப்பிடப்படுகிறது. மூன்று மாதங்களில் தனது தாயை அடையாளம் காண தொடங்கும். ஆறு மாதங்களில் அந்நிய மனிதர்களை கண்டு அச்சம் கொள்ளும். ஒன்பது மாதங்களில் கைகளை அசைப்பது போன்ற செயல்களை செய்யும். 12 மாதங்களில் அனைவரையும் அடையாளம் கண்டு, மற்றவர்கள் அழைத்தால் அவர்களிடம் குழந்தைகள் வரத் தொடங்கும். இவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது ஆட்டிசம் நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். இதுபோன்ற சமயங்களில் மருத்துவரை அணுகி ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை பெறுவது நல்ல பலனை தரும்.
இந்நோய் ஏற்பட்டால் நூறு சதவீதம் குணப்படுத்த இயலாது. அதே நேரத்தில், ஆரம்பகாலத்திலேயே பிஹேவியரல் தெரபி, ஸ்பீச் தெரபி போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது, அது பாதிப்பின் அளவை வெகுவாக குறைக்கும்.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகள், சரியான உடல் எடையை பராமரித்தல், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருத்தல், மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளுதல், போன்றவற்றை மேற்கொள்வதால் ஆட்டிசம் நோயின் அபாயத்தை வெகுவாக குறைக்க இயலும்.
