ADDED : ஜூலை 26, 2026 01:00 PM

மாரடைப்பு என்பது இன்று பலருக்கும் ஏற்படக்கூடிய நோயாக மாறியுள்ளது. சிறுவயதினரும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்
இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.
இதய நோய்க்கான, டி.எம்.டி., பரிசோதனை என்றால் என்ன?
'டிரெட் மில் டெஸ்ட்' என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது. இன்னும் சொல்வது என்றால், அதிக வேலைகள் செய்யும் போது, எனர்ஜி தேவை. அதற்கேற்ப இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். இந்த வலி எதனால், எந்த மாதிரியான கடின வேலை செய்யும் போது வருகிறது என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை இது.
'டிரெட் மில்' பரிசோதனை என்பது, முதற்கட்ட பரிசோதனை தான். இதில், ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, 'குரோனரி ஆஞ்சியோ கிராம்' என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.
தொடை அல்லது கையில் உள்ள தமணி வழியாக, நரம்பு போன்ற கத்திட்டரை (சோதனை கருவி) செலுத்தி, இதயம் வரை கொண்டு சென்று, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக என, கண்டறியப்படும். தற்போது, பெரும்பாலும் கை மணிக்கட்டு தமணியின் வழியாகவே அதிகம் செய்யப்படுகிறது. இது, எளிதாக கருதப்படுகிறது; எந்த சிக்கலும் இல்லை.
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, 'ஹீலியம்' என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர்.
அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே. சென்னை, அரசு பொது மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது; இலவசமாக செய்யப்படுகிறது.
