தூக்கம் உங்கள் கண்களை தழுவுவதில் மெலடோனின் பங்கு...!
தூக்கம் உங்கள் கண்களை தழுவுவதில் மெலடோனின் பங்கு...!
UPDATED : ஆக 10, 2022 11:01 AM
ADDED : ஆக 10, 2022 10:57 AM

மெலடோனின் என்பது மூளையில் பினியல் சுரப்பி இயற்கையாக உருவாக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது ஒரு உறக்கத்தைத் தூண்டும் சுரப்பி. படுக்கைக்கு முன் உடலை அமைதிப்படுத்துவதன் மூலம் இது தூங்க உதவுகிறது.
இருட்டான நிலையில் மெலடோனின் அளவுகள் அதிகரித்து, இது தூங்குவதற்கான நேரம் என உடலுக்கு உணர்த்துவதால் தூக்கம் கண்களை தழுவுகிறது. அதேநேரம் சூரிய ஒளியில் மெலடோனின் சுரப்பு தடுக்கப்படுவதால், தூக்க உணர்வு முற்றிலும் தவிர்க்கப்பட்டு விழிப்புடன் இருக்க முடிகிறது.
![]() |
'இன்சோம்னியா' என்ற தூக்கமின்மை, 'ஜெட்லேக்' என்ற வேறு நேர மண்டலங்களுக்குப் பயணிக்கும்போது ஏற்படும் உடல் கடிகாரக் கோளாறு ஆகியவற்றைச் சரிசெய்ய மெலடோனினை சிலர் பயன்படுத்துகின்றனர்.
சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
அதிக வேலை, மன அழுத்தம் அல்லது நீண்ட தூர பயணம் போன்ற காரணங்களால் தூக்கம் வராத நிலையில் மெலடோனின் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்திய குறிப்பிட்ட அளவை மட்டுமே எடுப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அதை எடுக்கலாம். மேலும், தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் இயற்கையாகவே உடலில் மெலடோனின் உற்பத்தித் துவங்குவது குறிப்பிடத்தக்கது.
'லெட் லேக்' என்ற விண் பயணக் களைப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள், பயணம் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே அதை எடுக்கத் துவங்கலாம்; முறையானத் திட்டமிடுதல் அவசியம். மெலடோனின் மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும், குமட்டல், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
யாருக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை?
![]() |
மனஅழுத்தம், ரத்தப்போக்கு, நீரிழிவு, வலிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மெலடோனின் மருந்துகளை உட்கொள்ளும் போது வீண்பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் மாற்று உறுப்பு பெறுநர்களுக்கு மெலடோனின் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடும்; நோயெதிர்ப்பைக் குறைக்கும் சிகிச்சையில் குறுக்கீடு ஏற்படக்கூடும் என்பதால் இவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
தவிர்க்க வேண்டியவை
மெலடோனின் மருந்துகளை சாப்பிட்ட பின் குறைந்தப்பட்சமாக 4 மணி நேரத்துக்கு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். பரிந்துரைக்கப்பட்ட பிற மருந்துகளுடன் மெலடோனின் சப்ளிமெண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மெலடோனின் எடுத்துக் கொள்ளும்போது மது அருந்தக்கூடாது. டீ, காபி போன்ற காஃபின் கொண்ட பானங்கள் குடிப்பதையும் தவிர்க்கலாம்; அவை மெலடோனின் நன்மை பயக்கும் விளைவுகளுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்புள்ளது.
தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது வயிற்றுக்கோளாறு குமட்டல், சோர்வு, டென்ஷன், தலைவலி, பகலில் தூக்கம், குறைந்த ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. உடல்நலம், வயது மற்றும் பிற பாதிப்புகளின் அடிப்படையில் மெலடோனின் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது உரிய மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே இதை எடுக்க வேண்டும்.


