மிகப்பெரிய மார்பகம் கொண்ட பெண்கள்; ஜெய்ஜாண்டோமாஸ்டியாவுக்குத் தீர்வு என்ன?
மிகப்பெரிய மார்பகம் கொண்ட பெண்கள்; ஜெய்ஜாண்டோமாஸ்டியாவுக்குத் தீர்வு என்ன?
UPDATED : அக் 31, 2022 06:47 PM
ADDED : அக் 31, 2022 05:36 PM

ஜெய்ஜாண்டோமாஸ்டியா (gigantomastia) பெண்களுக்கு உண்டாகும் ஒர் அரிதான உடல் குறைபாடு. இது பருவ வயது தொடங்கி, எந்த வயதுப் பெண்களையும் தாக்கவல்லது. திடீரென மார்பகம் அளவுக்கதிகமாகப் பெரிதாகி வளரும். இந்தப் பிரச்னை உள்ள பெண்களின் உடல் எடை அளவில் மூன்று சதவீதத்தை அவர்களது மார்பகமே ஆக்கிரமித்துக்கொள்ளும். ஜெய்ஜாண்டோமாஸ்டியா உள்ள பெண்களுக்கு மார்பகத்தின் எடை சராசரியாக மூன்று கிலோ இருக்கும்.

இந்தக் குறைபாட்டுக்குப் பல காரணங்கள் உள்ளன. சிறுமியர் சிலர், பூப்படைந்ததும் ஹார்மோன் மாற்றம் காரணமாக திடீரென மார்பகம் அளவுக்கதிகமாக பெரிதாகும். சில பெண்களுக்கு குழந்தையை சுமக்கும் காலத்தில் மார்பகம் பெரிதாகலாம். அதிகளவு மருந்துகள் சாப்பிடும் பெண்களுக்கும் உடற்பருமனான பெண்களுக்கும் திடீரென மார்பக சதை வளர்ச்சி அடைந்து, இதனால் கழுத்து மற்றும் அடிமுதுகு வலி ஏற்படலாம்.
சில நோய்களுக்கு பெனிசிலாமைன் (penicillamine) உள்ளிட்ட மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது ஹார்மோன் மாற்றத்தால் மார்பகம் பெரிதாகலாம். பரம்பரையாக பெரிய மார்பகம் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் பெண்களுக்கு அவர்களது வாழ்வின் பின்னாட்களில் இப்பிரச்னை உண்டாக வாய்ப்புள்ளது. மேலும் ஆர்த்தரைடிஸ் உள்ளிட்ட மூட்டுப் பிரச்னை உள்ள 50 வயதைக் கடந்த பெண்களுக்கும் ஏற்படலாம்.

ஜெய்ஜாண்டோமாஸ்டியா தாக்கப்பட்ட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும். முலைக் காம்புகளில் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மார்பகத்தின் அடிப்பகுதியில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மார்பகத்தில் அரிப்பு ஏற்படும் உணர்வு அடிக்கடி உண்டாகும். பெரிய மார்பகங்களை சுமர்ந்து நடப்பதால் தண்டுவட நிலை பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையால் சமூகத்தில் கிண்டலுக்குள்ளாகும் பெண்களுக்கு மனதளவில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மார்பகப் பரிசோதனை செய்யும் மகப்பேறு மருத்துவர்கள் சில மருந்துகள் மூலம் இதனை குணப்படுத்த முயலுவர். இது தோல்வியுற்றால் மார்பக அளவைக் குறைக்க அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
