UPDATED : அக் 21, 2026 10:29 AM
ADDED : அக் 18, 2026 07:09 PM

கோவை: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக புரோட்டீன் பவுடர், அழகுக்காக முடி சாயம், சருமத்தை வெள்ளையாக்கும் கிரீம் என பல்வேறு பொருட்களை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் உள்ள சில கெமிக்கல்கள், பாதரசம் மற்றும் கன உலோகங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக, ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை சிறுநீரக மருத்துவர் பிரபாகரன் எச்சரிக்கின்றார்.
இதைப்பற்றி அவர் மேலும் கூறியதாவது:
'பாதரசம் போன்ற கன உலோகங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, சிறுநீரில் அதிகளவு புரதம் வெளியேறும் நிலையை உருவாக்கலாம். சில நேரங்களில் சிறுநீரக செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து பயன்படுத்தும் பொருட்களில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை கவனிப்பது அவசியம்.
அதேபோல், உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் எடை அல்லது தசை வளர்ப்புக்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் புரோட்டீன் பவுடர்களை அதிகமாக எடுத்துக்கொள்வதும் தவிர்க்க வேண்டிய விஷயம்.
அதிக புரதம் கொண்ட உணவு அல்லது புரோட்டீன் சப்ளிமென்ட்களை தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இதுபோன்ற சப்ளிமென்ட்களை மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும்.
இதுபோலவே, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் உள்ளிட்ட சிறிய பிரச்னைகளுக்குக்கூட அடிக்கடி தாங்களாகவே மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும். உடல் நலத்துக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளே அளவுக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ பயன்படுத்தும்போது சிறுநீரகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகலாம்.
ஏற்கனவே சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளவர்கள் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அளவுக்கு மோசமடையலாம். சிறுநீரக பாதிப்பு ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கும். சிறுநீர் நன்றாக வெளியேறுகிறது என்பதாலேயே சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது என்று நினைக்கக்கூடாது.
பலருக்கு சிறுநீரக செயல்பாடு கணிசமாக குறைந்த பிறகே அறிகுறிகள் தெரியவருகின்றன. ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். குறிப்பாக சிறுநீரில் ஆல்புமின் அளவை பரிசோதிப்பது ஆரம்பகட்ட சிறுநீரக பாதிப்பை கண்டறிய உதவும்.
குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் எந்த மருந்து அல்லது சப்ளிமென்ட்டையும் தாங்களாகவே தொடங்காமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்' என சிறுநீரக மருத்துவர் பிரபாகரன் வலியுறுத்துகிறார்.
