UPDATED : மார் 23, 2023 02:06 PM
ADDED : மார் 23, 2023 01:59 PM

கோடையின் சூட்டை தணிக்க இயற்கை வழங்கியுள்ள பானம் இளநீர். இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் இயற்கை குளுக்கோஸ். வெயிலுக்கு இதமான, தாகத்தை தணிக்கும் இளநீர் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் தரும். இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடையில் குளிர் பானங்களுக்கு செலவிடுவதை இளநீருக்கு செலவிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.
சத்துகள் நிறைந்த இளநீர்
குறைந்த கலோரியும், குறைந்த சர்க்கரையும் கொண்ட பானம் இளநீர். இதில் ஒரு கப்-இல் 45 கலோரி ஆற்றல், 11 மி.கி., சர்க்கரை சத்து மட்டுமே உள்ளது. கொழுப்பு இல்லை.
சோடியம் (25 மி.கி.,)பொட்டாசியம் (470 மி.கி.,) ஆகிய சத்துகள் அதிகளவிலும், கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரசத்துகள் ஓரளவுக்கு இளநீரில் உள்ளதால், உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் சிறந்த பனமாக உள்ளது.
சிறந்த எனர்ஜி ட்ரிங்க்
![]() |
இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும். இதில் நுண்சத்துகளும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம், சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாக்கும். அதை சமாளிக்க இளநீர் உதவும்.
நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது
![]() |
அம்மை நோய் வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது நீர்ச்சத்தை ஈடுகட்ட இளநீர் சிறந்தது. இளநீர் பருக சிறுநீர் நன்றாக பிரியும். வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
வியர்க்குரு, தீக்காயங்கள், அமிலத்தால் ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றின் மீது இளநீரை தடவினால் விரைவில் குணமடையும். இளநீரில் உள்ள லாரிக் அமிலம் படர்தாமரை, எச்ஐவி, கிளமீடியா ஹெலிகோபேட்டர் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இளநீர் குடல்புழுக்களை அழிக்கிறது.
எடை, பிபி குறைக்க உதவும்
இளநீரில் கொழுப்பு, கொலஸ்ட்ராலும் இல்லை. இது உடலில் நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது.
உடற்பயிற்சி செய்தபின் உற்சாக பானங்களுக்கு பதில் இளநீர் அருந்தினால், சிறந்த பலன்கள் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதால், அதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
எச்சரிக்கை
இளநீர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகச் சிறந்த பானமாக இருந்தாலும், சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பதே சிறந்தது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சிறுநீர்க செயல்பாட்டை பாதிக்கலாம். அதேபோல் நீரழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இளநீர் அருந்துவதை தவிர்க்கலாம். இவர்களுக்கு முற்றின தேங்காயில் உள்ள இளநீரே பருக உகந்ததாகும்.