தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/கருவாடு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள்

கருவாடு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள்

கருவாடு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள்


UPDATED : நவ 08, 2026 12:06 PM

ADDED : நவ 07, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:06 PM ADDED : நவ 07, 2026 04:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் கருவாடு குழம்பு மற்றும் வறுவலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மீனில் உள்ள ஈரப்பதத்தைக் குறைத்து, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமிப்பதற்காக உலர்த்தித் தயாரிக்கப்படும் இந்த உணவில், ஏராளமான புரதச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், இதை தயாரிக்கும் முறை மற்றும் இதில் சேர்க்கப்படும் உப்பின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சாப்பிடுவது மிகவும் அவசியம்.

மீனை உலர்த்தும்போது அதில் உள்ள நீர்ச்சத்து முழுமையாக வெளியேறுவதால், புதிய மீனுடன் ஒப்பிடும்போது சம அளவு எடையுள்ள உலர்ந்த மீனில் புரதத்தின் செறிவு அதிகமாக இருக்கும். தசை வளர்ச்சி, திசு பராமரித்தல் மற்றும் செல்களைப் புதுப்பித்தல் போன்ற முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு இந்த உயர்தரப் புரதம் உதவியாக இருக்கும்.

உலர்ந்த மீன் வகைகளைப் பொறுத்து கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் கிடைக்கலாம். குறிப்பாக, சிறிய வகை உலர்ந்த மீன்களை எலும்புடன் சேர்த்துச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் கிடைக்கின்றன. இவை எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. மேலும், ஹீமோகுளோபின் உருவாக்கத்திற்குத் தேவையான இரும்புச்சத்தை வழங்கக்கூடும்.

உலர்ந்த மீனில் உள்ள ஆரோக்கியமான புரதமும் கொழுப்பும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதில் காணப்படும் வைட்டமின் பி12, நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும், புதிய ரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் மிகவும் முக்கியமானது.சில குறிப்பிட்ட மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களான இ.பி.ஏ மற்றும் டி.எச்.ஏ நிறைந்துள்ளன. இவை மூளை வளர்ச்சிக்கும், இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கும் வழிவகுக்கின்றன.

உலர்ந்த மீனைப் பதப்படுத்தும்போது அதிக அளவில் உப்பு சேர்க்கப்படலாம். இதனால் சில வகைகளில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். சோடியத்தை அதிகமாக உட்கொள்வது ரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் சிறுநீரக நோய் அபாயத்தையும் அதிகரிக்கலாம். சிறுநீரக நோய் உள்ளவர்கள் சோடியம் உட்கொள்ளும் அளவில் கூடுதல் கவனம் செலுத்தவும். அதிக உப்புள்ள கருவாட்டை அடிக்கடி அல்லது அதிக அளவில் சாப்பிடுவது, அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடலில் திரவச் சமநிலையைப் பாதிக்கக்கூடும். எனவே, சிறுநீரக நோயாளிகள் மருத்துவர் ஆலோசனையின்றி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மீன் முறையாக உலர்த்தப்படாமல், சுகாதாரமற்ற சூழலில் சேமிக்கப்பட்டிருந்தால் நுண்ணுயிர்கள் அல்லது பிற மாசுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற மீன்களை சாப்பிடுவதால் உணவு நச்சுத்தன்மை தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, பூஞ்சை படிந்த அல்லது துர்நாற்றம் வீசும் மீன்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கருவாட்டு குழம்பு அல்லது வறுவல் செய்யும்போது, தனியாக சேர்க்கும் உப்பின் அளவை பெருமளவு குறைக்க வேண்டும்.அதிக எண்ணெயில் பொரிப்பதை தவிர்த்து, குழம்பாகவோ அல்லது குறைந்த எண்ணெயில் வறுத்தோ சாப்பிடலாம்.

உலர்ந்த மீனை மட்டுமே பிரதான உணவாகக் கொள்ளாமல், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது ஊட்டச்சத்துச் சமநிலையை உறுதி செய்யும்.

கருவாடு, புரதம் நிறைந்த ஒரு பாரம்பரிய உணவாக இருந்தாலும், அதில் உள்ள உப்பின் அளவும் சுகாதாரத் தன்மையும்தான் அதன் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. எனவே, பக்கவிளைவுகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடனும், மற்றவர்கள் அளவோடும் சாப்பிட்டு இதன் சுவையையும் நன்மையையும் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us