UPDATED : ஜூலை 15, 2023 05:29 PM
ADDED : ஜூலை 15, 2023 05:28 PM

திடீரென நம் வாயில் கசப்பான சுவை ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
காரம், புளிப்பு உணவுகளைச் சாப்பிடுவதால் வாயில் கசப்பு ஏற்படலாம். ஆனால், வாய்க் கசப்பு நீண்டநேரம் நீடித்தாலும் அடிக்கடி ஏற்பட்டாலும் அது ஆரோக்கியக் குறைவுக்கான அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பிணிகளுக்கும் நோயுற்றவர்களுக்கும் வாய்க்கசப்பு ஏற்படலாம். தொடர்ந்து கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ளவேண்டும். பொதுவாக சில எளிய கைவைத்தியங்களை மேற்கொண்டு வாய்க்கசப்பைப் போக்கலாம்.
வாய்க்கசப்பு பிரச்னையுடன் வேறு அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பொறுத்து இதற்கான சிகிச்சை மாறுபடும். பற்களை துலக்குதல், பல் இடுக்கில் இருக்கும் துணுக்குகளை நீக்குவது, கெட்ட பாக்டீரியாக்களை வாயில் இருந்து அகற்றும் மவுத்வாஷை பயன்படுத்துதல் போன்றவை வழக்கமான பல் பராமரிப்பு முறைகள். உமிழ்நீர் வாயில் சுரந்துகொண்டே இருக்க சர்க்கரை இல்லாத சுயிங்கத்தை மெல்லலாம்.
![]() |
நீர்ப்பற்றாக்குறை காரணமாகவும் வாய்க்கசப்பு ஏற்படலாம். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள அல்லது காரமான உணவுகளை உண்ணுதல், மது மற்றும் புகைப்பழக்கங்களைத் தவிர்த்தல் வாய்க்கசப்பு நீங்க சுலபமான வழிமுறைகள். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து வாயை கொப்பளித்தால் வாய்க் கசப்பு நீங்கிவிடும்.

