/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கோடைக்கு இதமாக பால்முரி அருவியில் ஓர் குளியல்
/
கோடைக்கு இதமாக பால்முரி அருவியில் ஓர் குளியல்
ADDED : மார் 12, 2025 11:30 PM

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. வெயில் சுட்டெரிக்கிறது. கோடையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உடனடியாக கிளம்பி, ஏதாவது ஓர் அருவிக்குச் சென்று குளியலை போட்டால் தான் உண்டு.
இதைக் கூறிய உடன், எங்கே செல்வது என உங்கள் மனதிற்கு ஆயிரம் கேள்விகள் வரலாம். இந்த கேள்விகளுக்கான விடையாக இந்த கட்டுரை இருக்கும்.
மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் உள்ளது பால்முரி அருவி. இதை சுற்றி பச்சை பசேலென தென்னை மரங்கள் சூழ்ந்து உள்ளன. இந்த நீர்வீழ்ச்சி, ஓர் சிறிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.
இந்த அருவிக்கு, கோடைகாலங்களில் பலரும் வருகை தருகின்றனர்.
கோடையில், நீரின் வரத்து சற்று குறைவாக இருப்பதால், நீரின் ஆழம் அதிகமாக இருக்காது. இதனால், நீரில் விளையாடுவதற்கு பாதுகாப்பாக உள்ளது. இங்கு கோடை மட்டுமின்றி, குளிர்காலங்களில் கூட வந்து குளிக்கலாம்.
இதன் சிறப்பு என்னவென்றால், இங்கு சுற்றுலா பயணியர் கூட்டம் அதிக அளவில் இருக்காது.
இதனால் சற்று நாம் நிம்மதியாக குளியலை போடலாம். மழைக்காலங்களில் நீர் அதிகமாக இருக்கும்போது, படகு சவாரியும் நடத்தப்படுகிறது.
பால்முரி அருவிக்கு வருபவர்கள், மேலும் பல சுற்றுலாத் தலங்களை எளிதில் பார்வையிட முடியும்.
அருவியில் இருந்து 10 கி.மீ., தொலைவில், ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயம் மாநில அளவில் மிகப் பெரியது. இதன் காரணமாக உள்ளூர்வாசிகள், வெளிநாட்டினர் என, தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர்.
அருவியில் இருந்து 8 கி.மீ., தொலைவில், காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளது. இதைப் பார்வையிடுவதற்கு அனுமதி உள்ளது.
அருகிலே 60 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பிருந்தாவனத் தோட்டமும் உள்ளது. அருவியில் இருந்து 14 கி.மீ., தொலைவில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் அரண்மனையும் உள்ளது. இதை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பால்முரி அருவிக்கு வந்தால், கோடைக்கு இதமாக குளியலையும் போடலாம். அருகில் உள்ள இடங்களையும் பார்வையிடலாம். அருவில் குளிக்க அனுமதி இலவசம்.
காலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பைக்குக்கு இருபது ரூபாய், காருக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அருவியை பார்வையிடுவதற்கு, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்கள் சிறந்த மாதங்களாக கருதப்படுகிறது.
- நமது நிருபர் -