ADDED : ஆக 16, 2025 10:26 PM

செய்முறை: முதலில், கொண்டைக்கடலையை தண்ணீரில் நன்றாக கழுவி பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார், ஆறுமணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்த கொண்டைக்கடலை, மஞ்சள்துாள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு இறக்கவும். பிறகு சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அவற்றை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசனை போன பிறகு, அதில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லித்துாள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் வேகவைத்து எடுத்த கொண்டைக்கடலையையும் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது குழம்பை சுமார் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை குழம்பு மேல் துாவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கருப்பு கொண்டைக்கடலை குழம்பு ரெடி.