/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சோழர்கள் கட்டிய குரு வீரபத்ரேஸ்வரா கோவில்
/
சோழர்கள் கட்டிய குரு வீரபத்ரேஸ்வரா கோவில்
ADDED : மார் 04, 2025 06:41 AM

சோழர்கள் கட்டிய கோவில் என்றால், அதன் கட்டட கலை பாணியை பற்றி, நமக்கு சந்தேகமே வேண்டாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கம்பீரமாக காட்சி அளிக்கும். இடி, மின்னல் என்று எது தாக்கினாலும், கட்டடத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் சோழர்கள் காலத்தில் கட்டிய ஏராளமான, கோவில்கள் இன்னமும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
பெங்களூரு எலஹங்கா தாலுகா வித்யரண்யபுரா வார்டு திண்டுலுவில், குரு வீரபத்ரேஸ்வரா கோவில் உள்ளது. வீரபத்ரேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. 1,200 ஆண்டுகள் பழமையானது. கோவிலில் நுழைவாயில் கோபுரம் நந்தி சிலையுடன், பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள மரங்கள், ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக உள்ளது.
கோவிலுக்கு ஏதாவது மன கஷ்டத்தில் வருவோருக்கு கூட, பறவைகளின் கீச்… கீச் சத்தம் கேட்டால் மன அமைதி கிடைக்கும். மஹா கணபதி, ஆஞ்சநேயர், நாராயணசாமி, கால பைரேஸ்வரா, காசி விஸ்வேஸ்வரா, சண்டிகேஸ்வரா சுவாமி சிலைகள் இந்த கோவிலில் உள்ளன. நவக்கிரகங்களுக்கும் பூஜை நடக்கிறது.
வீரபத்ரேஸ்வரா சுவாமியை வேண்டி கொண்டால், மனதில் நினைப்பது நடக்கும் என்றும், இந்த கோவிலுக்கு வந்தால் மன நிம்மதியுடன் தான் திரும்பி செல்கிறோம் எனவும், இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். ஒரே இடத்தில் பல கடவுள்களை வணங்குவது, தங்களுக்கு கிடைக்கும் பாக்யம் என்றும் கூறுகின்றனர்.
இந்த கோவிலின் நடை தினமும் காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். சொந்த வாகனத்தில் வருவோர், வாகனங்களை நிறுத்துவதற்கு விசாலமான இடம் உள்ளது.
- நமது நிருபர் -