/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
'டிரெக்கிங்' செல்வோருக்கு ஏற்ற கல்வாரா பெட்டா
/
'டிரெக்கிங்' செல்வோருக்கு ஏற்ற கல்வாரா பெட்டா
ADDED : மார் 06, 2025 12:14 AM

பெங்களூரில் ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு, மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் வார இறுதி நாட்களில் எங்கேயாவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்புவர்.
குறிப்பாக மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்து கொள்ள, டிரெக்கிங் செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவர். தோளில் ஒரு பெரிய பேக், அதற்குள் தேவையான பொருட்கள், கையில் ஒரு தடியை எடுத்து கொண்டு மலையேற ஆரம்பித்து விடுவர்.
இதனால், வார இறுதி நாட்களில் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள ராம்நகர், துமகூரு, கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகளுக்கு கடும் கிராக்கி இருக்கும். இதில் ஒரு மலையை பற்றி பார்ப்போம்.
சிக்கபல்லாபூரில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளது சுடஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கல்வாரா பெட்டா என்ற மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,760 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.
அடிவாரத்தில் இருந்து செல்லும் போது சாலை சற்று கரடு முரடாக இருக்கும். ஆனால் மலை மீது ஏற ஏற, புதிய அனுபவமாக இருக்கும்.
மலை உச்சியில் பழமையான சிறிய மண்டபம், நந்தி சிலை அமைந்துள்ளது. சிறிய மண்டபத்தின் மீது ஏறி நின்று பார்த்தால் சுடஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை கண்டு ரசிக்கலாம். இந்த மலையில் இரவு கூடாரம் அமைத்து தங்கவும் அனுமதி உண்டு.
இரவில் தங்குபவர்கள் அதிகாலையில் எழுந்தால், சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம். மேகங்கள் பாறை மீது தவழ்ந்து செல்வதை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நண்பர்களுடன் ஒரு குழுவாக சென்று, பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.
பெங்களூரில் இருந்து சுடஹள்ளி கிராமம் 80 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. கார், பைக்குகளில் சென்றால் மலை அடிவாரத்தில் நிறுத்தலாம். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சிக்கபல்லாபூருக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சிக்கபல்லாபூரில் இறங்கி அங்கிருந்து மாற்று பஸ்சில் சுடஹள்ளி கிராமத்தை சென்றடையலாம். ஆந்திரா எல்லையில் சிக்கபல்லாபூரில் அமைந்து உள்ளதால், ஆந்திராவில் இருந்தும் நிறைய சுற்றுலா பயணியர், மலையேற்றம் செல்ல இங்கு வருகின்றனர்.
- நமது நிருபர் -