/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மைசூரை சுற்றியுள்ள விலங்குகள் சரணாலயங்கள்
/
மைசூரை சுற்றியுள்ள விலங்குகள் சரணாலயங்கள்
ADDED : ஜூலை 10, 2025 03:36 AM

மைசூரு அருகில் ஐந்து அற்புதமான வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. இவைகள் சுற்றுலா பயணியர், வன விலங்கு ஆர்வலர்களை தன் வசம் சுண்டி இழுக்கின்றன. வெளி மாவட்டங்கள், நாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். சபாரி சென்று குஷி அடைகின்றனர்.
மைசூரு உலக பிரசித்தி பெற்ற மாவட்டம். உலகின் சுற்றுலா பயணியருக்கு விருப்பமான இடங்களை பட்டியலிட்டால், மைசூரு கட்டாயம் இருக்கும். புராதன கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள் சூழ்ந்துள்ளன. இங்கு நடக்கும் தசரா உலக பிரசித்தி பெற்றது. மைசூரில் குட்டீஸ்களுக்கு பிடித்தமான வன விலங்கு சரணாலயங்கள் உள்ளன. இயற்கையை விரும்புவோர், வன விலங்கு ஆர்வலர்கள் வரலாம்.
பண்டிப்பூர்
மைசூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் பண்டிப்பூர் தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இப்பூங்கா 874 கி.மீ., விசாலமானதாகும். வெள்ளை புலிகள் உட்பட, அபூர்வமான விலங்குகள், அரிய வகை பறவைகள் உள்ளன.
ஜீப்பில் சபாரி செய்து, சுதந்திரமாக சுற்றி திரியும் விலங்குகள், இயற்கையை ரசிக்கலாம். இன்னிசை பாடும் பறவைகளின் குரலை கேட்கலாம்.
நாகரஹொளே
நாகரஹொளே தேசிய பூங்காவை, 'ராஜிவ் காந்தி தேசிய பூங்கா' என்றும் அழைக்கின்றனர். இப்பூங்கா மைசூரில் இருந்து, 96 கி.மீ., தொலைவில் உள்ளது. 643 கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். ஆசிய யானைகள், மான்கள் இங்குள்ளன. அடர்த்தியான வனப்பகுதி சூழப்பட்டதாகும்.
வனப்பகுதிக்குள் வளைந்து, நெளிந்து ஓடும் ஆறுகள், அற்புதமான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. 250 க்கும் மேற்பட்ட பல வகை பறவைகளை காணலாம். மைசூருக்கு வரும் பலரும், நாகரஹொளே தேசிய பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை.
பிளிகிரி ரங்கசுவாமி
மைசூரில் இருந்து 122 கி.மீ., தொலைவில் பிளிகிரி ரங்கசுவாமி வன விலங்குகள், பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு காவிரி ஆற்றில் படகில் சென்றபடி, பறவைகளை காண்பது, இயற்கையில் லயிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
மான், சிறுத்தை, யானைகள், முள்ளம் பன்றி உட்பட, பல வகையான விலங்குகளை கண்டு மகிழலாம். ஜீப் சபாரி செய்யலாம். சாகச பிரியர்கள் டிரெக்கிங் செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. முறைப்படி வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொண்டு, டிரெக்கிங் செய்யலாம். கூகுள் மேப்பை நம்பாமல், வழிகாட்டிகளை உடன் அழைத்து செல்வது நல்லது.
காவிரி சரணாலயம்
மைசூரில் இருந்து, 120 கி.மீ., தொலைவில் காவிரி வன விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. பிரமாண்டமான இந்த சரணாலயம், மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் என, மூன்று மாவட்டங்களில் விரிவடைந்துள்ளது. அடர்த்தியான வனப்பகுதி கொண்டுள்ளது. இங்கும் கூட நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் உள்ளன.
ஆனால் இவைகள் மிகவும் ஆழமானவை. எவ்வளவு ஆழம் என்பது, உள்ளூர் மக்களுக்கே தெரியாது. எனவே சுற்றுலா பயணியர், இதில் இறங்குவது அபாயமானது. சற்று தொலைவில் இருந்து, நீர் வீழ்ச்சிகள், ஆறுகளை பார்த்து விட்டு திரும்புவது நல்லது.
ஆற்றில் படகு சவாரி செய்யலாம். கேம்பிங் செய்யலாம். மழைக்காலத்தில் இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். இயற்கையின் மடியில், கூடாரம் போட்டு இரண்டொரு நாட்கள் தங்கி செல்வர்.
மேல்கோட்டே
மைசூரில் இருந்து, வெறும் 50 கி.மீ., தொலைவில் மேலுகோட்டே வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் செலுவராய சுவாமி கோவில் பெயரில் செயல்படுகிறது. செலுவராய சுவாமியை தரிசிக்க வருவோர், மறக்காமல் வன விலங்குகள் சரணாலயத்துக்கும் செல்லுங்கள்.
கண்களுக்கும், மனதுக்கும் இதமளிக்கும் இயற்கை காட்சிகள், அரிய வகை விலங்குகள், பறவைகளை ரசிக்கலாம். போட்டோ ஷூட் நடத்த அருமையான இடமாகும்.
- நமது நிருபர் -