/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பெலகாவியின் சொர்க்கம் இந்தியாவின் நயாகரா கோகாக் நீர்வீழ்ச்சி
/
பெலகாவியின் சொர்க்கம் இந்தியாவின் நயாகரா கோகாக் நீர்வீழ்ச்சி
பெலகாவியின் சொர்க்கம் இந்தியாவின் நயாகரா கோகாக் நீர்வீழ்ச்சி
பெலகாவியின் சொர்க்கம் இந்தியாவின் நயாகரா கோகாக் நீர்வீழ்ச்சி
ADDED : ஆக 07, 2025 05:27 AM

அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆசை, ஏக்கம் இருக்கும். ஆனால் அனைவராலும் அங்கு செல்ல முடியாது. ஆனால் கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள நயாகரா போன்ற நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க முடியுமே!
பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவில் கோகாக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, அமெரிக்காவின் நயாகராவுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. ஒரு முறை பார்த்தால், போதும்; அந்த இடத்தை விட்டுச் செல்ல மனதே வராது.
மஹாராஷ்டிராவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால், 'இந்தியாவின் நயாகரா' என்று அழைக்கப்படும் கோகாக் நீர்வீழ்ச்சியில், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது கண் கொள்ளா காட்சியாக உள்ளது.
விசாலமான பாறைகள் மேலிருந்து, நிதானமாக பாய்ந்து வந்து, ஆக்ரோஷமாக பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்கிறது. பால் நுரை போன்று பாயும் நீர், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. 180 மீட்டர் உயரத்தில் இருந்து பாயும் இதன் அழகில் மயங்காதோரே இருக்க முடியாது.
இதை பார்ப்பதற்காக, கர்நாடகா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கோவா உட்பட, பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வருகின்றனர். சுற்றிலும் பசுமையான இயற்கை சூழ்ந்த வனப்பகுதியில், நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பது, சொர்க்கத்துக்கு வந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
நீர்வீழ்ச்சியை பார்க்க, சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருவதால், பெலகாவி மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா பயணியர் நீர் வீழ்ச்சி அருகில் செல்லாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணியர், அருகில் செல்லாமல் தொலைவில் நின்று பார்த்து ரசித்துவிட்டு திரும்ப வேண்டும். நீரில் இறங்கவோ, விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ முயற்சிக்கக் கூடாது. நீர்வீழ்ச்சியை பார்க்க, குறிப்பிட்ட நேரம் என்பது இல்லை. 24 மணி நேரமும் நீர்வீழ்ச்சியை பார்க்க அனுமதி உள்ளது.
- நமது நிருபர் -