/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குடகில் ரப்பர் படகு சாகசம் விருப்பமா?
/
குடகில் ரப்பர் படகு சாகசம் விருப்பமா?
ADDED : ஏப் 16, 2025 11:37 PM

குடகு மாவட்டத்தின் கோனிகொப்பாலில் இருந்து 27 கி.மீ., தொலைவில் பாராபோல் ஆறு அமைந்து உள்ளது. இது, ரப்பர் படகு சாகசத்துக்கு ஏற்ற இடம்.
பிரம்மகிரி மலையில் இருந்து வரும் கித்து ககத்து ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் பாராபோல் ஆறு, அரபிக் கடலில் கலக்கிறது. தென் மாநிலங்களில் மிகவும் சவாலான ரப்பர் படகு சாகசத்துக்கு ஏற்ற இடமாக கருதப்படுகிறது.
கிட்டத்தட்ட 9 கி.மீ., நீளத்துக்கு செல்லும் இந்த நதியில், இரண்டு முதல் நான்கு கி.மீ., துாரம் கடினமான நீரோட்டம் கொண்டவை. ரப்பர் படகில் கடினமான நீரோட்டம் உள்ள இடங்களை, 'மார்னிங் காபி, கிராஸ் ஹாப்பர், ரம்பா சம்பா, விக்டு விட்ச், 'பிக் பாங்க்' என புனை பெயர் வைத்து அழைக்கின்றனர்.
ஆற்றில் 3 முதல் 4 கி.மீ., நீளத்துக்கு செல்லும் இந்த படகு சவாரி, மூன்று மணி நேரம் தொடரும். அழகான நிலப்பரப்பு வழியாக ஓடும் வேகமான ஆற்றில், ரப்பர் சாகச படகில் பயணிப்பது, வெள்ளி நீரோடை மீது பயணிக்கும் அனுபவத்தை தரும்.
அடர்ந்த பிரம்மகிரி வனப்பகுதி சரணாலயம் வழியாக படகில் செல்லும் போது புதிய அனுபவத்தை தரும்.
இந்த ரப்பர் படகு சாகசத்தில் பயணிப்போருக்கு 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று கண்டிப்பான விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர்.
பெரியவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் 110 கிலோவுக்கும் குறைவாக, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன், படகில் செல்லும் போது அனுபவம் வாய்ந்தவர்கள், எவ்வாறு துடுப்பு போட வேண்டும் என்பது உட்பட பல ஆலோசனைகள் வழங்குவர். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஏனெனில், அவர்களே உயிர் காக்கும் கவசத்தை அணிவித்து தான், அனுப்பி வைக்கின்றனர்.
இங்கு ஆண்டு முழுதும் ரப்பர் படகு சவாரி நடக்கிறது. தினமும் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை இயக்கப்படுகிறது. ஒருவருக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- நமது நிருபர் -