/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் கஜேந்திரகடா கோட்டை
/
தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் கஜேந்திரகடா கோட்டை
தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் கஜேந்திரகடா கோட்டை
தொழில்நுட்பத்துக்கு சவால் விடும் கஜேந்திரகடா கோட்டை
ADDED : பிப் 05, 2025 09:41 PM

இன்றைய நவீன காலத்தில் கட்டப்படும் கட்டடங்கள், சில ஆண்டுகளும் நீடிப்பதில்லை. இடிந்து விழுவதை காண்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டைகள், இப்போதும் கம்பீரமாக நிற்கின்றன. இவற்றில் கஜேந்திரகடா கோட்டையும் ஒன்றாகும்.
கதக், கஜேந்திரகடாவில் அமைந்துள்ள கோட்டை, பேஷ்வா வம்சத்தினர் கட்டியதாகும். 800 அடி உயரமான மலையில், இயற்கை அழகு சூழ்ந்துள்ள அற்புதமான இடத்தில், கோட்டை கட்டப்பட்டுள்ளது. வரலாற்றின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், இப்படிப்பட்ட அற்புதமான கோட்டை கட்டப்பட்டுள்ளது. இன்றைய பொறியாளர்களுக்கு சவால் விடும் வகையில், வலுவாக உள்ளது.
பார்ப்போரை வியக்க வைக்கிறது. உள்நாடு, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஆர்வத்துடன் கோட்டையை சுற்றி பார்க்கின்றனர். மராட்டிய மன்னர்களுக்கு பின், கஜேந்திரகடாவில் பேஷ்வாக்கள் ஆட்சிக்கு வந்தனர். 1710 முதல் 1757 வரை, முதலாவது பேஷ்வா மன்னர் பாலாஜி பாஜிராவ் ஆட்சி நடத்தினார்.
இவரது காலத்தில், கஜேந்திரகடாவில் கோட்டைகள், கோவில்கள், நினைவிடங்கள் அதிகமாக கட்டப்பட்டதாக, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர். 800 அடி உயரமான மலையில் கோட்டையை கட்டி முடிக்க, 15 ஆண்டுகள் ஆனதாம். 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகி இன்றைக்கும் கம்பீரமாக நிற்கிறது.
கோட்டையை காண, படிகளில் ஏறி சென்றால் நீர ஹனுமன் கோவிலை தரிசிக்கலாம். இங்கு சஞ்சீவினி மலையை துாக்கி பிடித்தபடி, பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
கோட்டை சுவரில், குதிரை மீது அமர்ந்து வாள் வீசும் பாலாஜி பாஜிராவ் உருவச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. எதிரி படையினர் தாக்குதலை, எதிர் கொள்ளும் நோக்கில், கோட்டை நுழைவாசல் அருகில், ஆயுத கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை உள்ளிருந்தே பீரங்கியால் தாக்குதல் நடத்தி, எதிரிகளை விரட்ட குண்டுகள் சேகரித்து வைக்க, இந்த கிட்டங்கி கட்டப்பட்டதாம். இக்கிடங்கில் இப்போதும் வெடிபொருள் வாசம் நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டையில் மஹாலட்சுமி கோவில், வீராஞ்சநேயர் கோவில், ஹஜரத் மெஹபூப் சுபானி தர்கா அமைந்துள்ளது. இன்றைக்கும் அனைத்து மதத்தவரின் ஒற்றுமைக்கு, சாட்சியாக உள்ளது. மலை மீது கோட்டை மட்டுமின்றி, அக்கா, தங்கை குளம், புலி குளம், பசு குளம், குரங்கு குளம், தீர்த்த கிணறுகள், நினைவிடங்கள் சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கிறது.
- நமது நிருபர் -