/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கையை ரசிக்க கங்காடிகல்லு 'வியூ பாயின்ட்'
/
இயற்கையை ரசிக்க கங்காடிகல்லு 'வியூ பாயின்ட்'
ADDED : பிப் 19, 2026 07:12 AM

சிக்கமகளூரு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, குதிரேமுக் வனப்பகுதிக்கு உட்பட்டது கங்காடிகல்லு வியூ பாயின்ட் பகுதி. கடல் மட்டத்தில் இருந்து, 4,806 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், பசுமையை போர்வையாக தன் மீது போர்த்தி உள்ளது.
மலை அடிவாரத்தில் துவங்கி உச்சிக்கு செல்லும் வரை முழுக்க, முழுக்க இயற்கையின் மடியில் தவழ்ந்தே செல்லும் புதிய அனுபவத்தை நாம் பெறலாம். மலையேற்றத்தின் போது அதிர்ஷ்டசாலியாக இருந்தால் காட்டெருமை, மான், பறவைகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு உண்டு.
மலை உச்சிக்கு சென்ற பின், குதிரேமுகா வனப்பகுதியின் பரந்து விரிந்த தோற்றத்தை கண்டு ரசிப்பதுடன், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பச்சை, பசலேன காட்சி அளிக்கும் புல்வெளிகளை கண்குளிர பார்க்கும் அனுபவத்தை பெறலாம்.
மலை உச்சியில் இருந்து லக்யா அணையின் நீர்த்தேக்க பகுதியை பார்க்கலாம். உச்சியில் இரும்பால் அமைக்கப்பட்டு உள்ள நடைமேடையில் ஏறி நின்று, மலையின் அழகை கண்டு ரசிப்பது பேரானந்தத்தை அளிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் இருந்து பிப்ரவரி வரை மலையேற்றத்திற்கு உகந்த மாதங்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கத்தால், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், அந்த நேரத்தில் மலையேற்றத்திற்கு அனுமதி இல்லை. காலை 7:00 மணிக்கு மலையேற்றம் துவங்குகிறது.
நான்கு மணி நேரத்தில் மலை உச்சிக்கு சென்று விடலாம். சொந்த வாகனங்களில் செல்வோர், மலையேற்றம் துவங்கும் இடத்திலேயே வாகனங்களை நிறுத்தி செல்லலாம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து கங்காடிகல்லு 340 கி.மீ., துாரத்தில் உள்ளது.
பஸ்சில் செல்வோர் கலசா சென்று அங்கிருந்து 33 கி.மீ., துாரத்தில் உள்ள கங்காடிகல்லுக்கு ஆட்டோ, வாடகை காரில் செல்லலாம்.
ரயிலில் சென்றால் சிக்கமகளூரு சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம்.
கங்காடிகல்லுவில் இருந்து 96 கி.மீ., துாரத்தில் மங்களூரு சர்வதேச விமான நிலையம் உள்ளது.
- நமது நிருபர் -

