/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
/
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
கொண்டாட்டங்களின் தலைநகரம் கோவா: வண்டாட்டம் கடற்கரைகளில் பயணிகள்
UPDATED : அக் 05, 2025 08:07 AM
ADDED : அக் 05, 2025 08:03 AM

அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும் கோவாவில் கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை. 1961க்கு முன் வரை போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தில் இருந்த கோவாவில் பாகா, கண்டோலிம், பாலோலெம் என 21 கடற்கரைகளின் பெயர்கள் நீண்டு செல்லும்.
பார்க்கும் இடமெல்லாம் ஈர்க்கும் கடற்கரைகள், பிள்ளையைப் போல துள்ளியோட வைத்து மகிழ்ச்சியை கையில் அள்ளித்தரும். கடற்கரைகளின் நீர் விளையாட்டுகள், இந்திய, போர்ச்சுக்கீசிய கலாச்சார செறிவு மிகுந்த கட்டடங்கள், போர்ச்சுக்கீசியர் காலத்திய பாரம்பரிய சர்ச், கோட்டை, ஆன்மிகத்திற்கு கோயில்கள் என சுற்றுவதற்கு ஏகப்பட்ட இடங்கள் உள்ளன.
![]() |
மதுரை, திருச்சி, சென்னையில் இருந்து கோவாவிற்கு விமானப்பயணம் அல்லது ரயில் பயணம் மேற்கொள்ளலாம். வடக்கு கோவா, தெற்கு கோவா என இரண்டு விமானநிலையங்கள் உள்ளன. வடக்கு கோவாவில் பாகா, கலாங்கட் கடற்கரைகள் பிரமிக்க வைக்கும். தெற்கு கோவாவில் பாலோலெம், பட்டர்பிளை கடற்கரைகள் அழகூட்டும். தத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் செல்லலாம். பாராசெய்லிங், ஜெட் ஸ்கையிங் நீர் விளையாட்டுகள், ஸ்கூபா டைவிங், ஹாட் ஏர் பலுான் விளையாட்டுகளும் உள்ளன.
அதிசயத்தின் ஊற்று அகோடா கோட்டை
யுனெஸ்கோவின் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற சர்ச், சிதிலமடைந்த சர்ச், அகோடா கோட்டை ஆகியவை பழைய கோவாவின் கலாசாரச் செழுமையை பறைசாற்றுகின்றன. பரந்த புல்வெளியைத் தாண்டி அகோடா கோட்டைக்குள் நுழையும் போதே கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ள அகழியின் ஆழம் பிரமிப்பூட்டுகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பிரமாண்ட கோட்டையின் மேல்தளத்தில் இருந்து தென்னை மரக்கூட்டங்களின் அழகையும் ஆவேசமான அலையின் வீச்சையும் ரசிக்கலாம்.
![]() |
பஜார் பரவசம்
செல்லும் இடமெல்லாம் பஜார்களில் கடைகள் களை கட்டுகின்றன. குறிப்பாக தென்னை மரங்களை குறிக்கும் வகையில் ஆடைகளில் தென்னை மரங்கள் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன. ஹேண்ட் பேக், பல்வேறு வண்ணங்களில் உள்ள கற்களை கம்பியில் கட்டி அழகிய பிரேஸ்லெட், நெக்லஸ், கம்மலாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இளையோர்களாக சுற்ற வேண்டுமெனில் காரை வாடகைக்கு எடுக்க வேண்டியதில்லை. திரும்பும் திசையெல்லாம் 50க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் வாடகை சைக்கிளைப் போல நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோலை நிரப்பினால் கோவாவின் சந்து, பொந்துகளை இஷ்டம் போல் சுற்றி வரலாம்.
![]() |
பாகா பீச், மிராமர் உட்பட சில பீச்களில் நீர் விளையாட்டுகளில் பங்கேற்கலாம். வகாட்டர் பீச்சில் பாறைக்கூட்டம் அதிகம்.
அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் என்றாலும் ஆண்டில் எந்த மாதம் சென்றாலும் கடற்கரைகளின் அழகு குறையாது. கோட்டைகளின் கம்பீரம் மாறாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியவில்லை என கவலை வேண்டாம்; இந்தியாவின் தண்ணீர் சொர்க்கபூமியான கோவாவுக்கு பறக்கலாம்; ரசிக்கலாம்.