
பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்வோர் தங்கள் வேலைப்பளுவை குறைக்க, வார இறுதி நாட்களில், 'டிரெக்கிங்' எனும் மலையேற்றம் செல்வர். பெங்களூரை சுற்றியுள்ள கோலார், துமகூரில் மாவட்டங்களில் ஏராளமான டிரெக்கிங் இடங்கள் உள்ளன. இதில் ஒன்று ஹுலுகுடி பெட்டா.
பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் இருந்து தாபஸ்பேட் வழியாக நெலமங்களா செல்லும் வழியில், ஹுலுகுடி பெட்டா உள்ளது. டிரெக்கிங்கிற்கு ஏற்ற இடமாக உள்ள இங்கு, வார இறுதி நாட்களில் ஏராளமானோர் டிரெக்கிங் செல்கின்றனர்.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல குறிப்பிட்ட இடம் வரை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பின், கரடுமுடான பாதை வழியாக பயணத்தை தொடர வேண்டும். மலை உச்சிக்கு செல்லும் வழியில் ஓய்வெடுக்க பாறைகளை செதுக்கி இருக்கை போன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாறை மீது அமர்ந்து பார்க்கும் போது கண்ணுக்கு எட்டிய துாரம் வரை உள்ள கிராமங்கள், வயல்வெளிகள் அழகை கண்டு ரசிக்கலாம்.
அதிகாலை 5:00 மணிக்கே டிரெக்கிங்கை துவங்கினால், சில்லென வீசும் காற்று, பக்கத்தில் யார் நடந்து செல்கின்றனர் என்று கூட தெரியாத அளவுக்கு இருக்கும் பனிமூட்டத்திற்கு நடுவில், டிரெக்கிங் செல்லலாம். மலையேற்றம் துவங்கும் இடத்தில் வீரபத்ரேஸ்வரா கோவில் உள்ளது.
இங்கு தரிசனம் செய்து விட்டு, டிரெக்கிங் துவக்குகின்றனர். மலை உச்சிக்கு சென்றதும் சிறிய குளங்கள், துாரத்தில் தெரியும் ஏரிகளை கண்டு ரசிக்கலாம். இப்பகுதியில் கடைகள் எதுவும் இல்லாததால் உணவு பொருட்களை எடுத்து செல்வது நல்லது. வாகனங்களை நிறுத்துவதற்கு, வீரபத்ரேஸ்வரா கோவில் பகுதியில் இடம் உள்ளது.
எப்படி செல்வது?
l பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்தில் ஹுலுகுடி பெட்டா உள்ளது.
l பெங்களூரு நகரில் இருந்து கார், பைக்கில் செல்வோர் துமகூரு சாலை வழியாக பயணம் மேற்கொள்ள வேண்டும்.
l மெஜஸ்டிக்கில் இருந்து தொட்டபல்லாபூருக்கு பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது.
- நமது நிருபர் -

