/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கண்ணோடு காண்பதெல்லாம் அழகா...? சுற்றுலா பயணியரின் சொர்க்கம் ஹாலவாகிலு நீர் வீழ்ச்சி
/
கண்ணோடு காண்பதெல்லாம் அழகா...? சுற்றுலா பயணியரின் சொர்க்கம் ஹாலவாகிலு நீர் வீழ்ச்சி
கண்ணோடு காண்பதெல்லாம் அழகா...? சுற்றுலா பயணியரின் சொர்க்கம் ஹாலவாகிலு நீர் வீழ்ச்சி
கண்ணோடு காண்பதெல்லாம் அழகா...? சுற்றுலா பயணியரின் சொர்க்கம் ஹாலவாகிலு நீர் வீழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 05:40 AM

மழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளது. காணாமல் போன பசுமை மீண்டும் திரும்பியுள்ளது. வனப்பகுதி, மலைப்பகுதிகளின் இயற்கை அழகு அதிகரித்துள்ளது. மழைக்காலத்தை ரசிக்க எங்கு செல்லலாம் என, யோசிக்கிறீர்களா. அப்படி என்றால் ஹாலவாகிலு நீர்வீழ்ச்சி பெஸ்ட் சாய்ஸ்.
ஹாசன் மாவட்டத்தில் இயற்கை அழகு கொஞ்சும் பல்வேறு இடங்கள் உள்ளன. மழைக்காலம் வந்து விட்டால், இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகம் இருக்கும்.
உயரமான இடத்தில் இருந்து, பேரிரைச்சலுடன் தண்ணீர் பாய்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இதற்காகவே மழைக்காலம் வந்து விட்டால், நீர்வீழ்ச்சிகளை பார்க்க சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதும்.
ஹாசனில் உள்ள ஹாலவாகிலு நீர்வீழ்ச்சி மிகவும் அற்புதமானது. தன் அழகால் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் தன்மை கொண்டது. வெண்மை நிறத்தில் பால் நுரை போன்று பொங்கி வருவதால், இதற்கு ஹாலுவாகிலு நீர்வீழ்ச்சி என, பெயர் ஏற்பட்டது.
சுற்றிலும் கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளுக்கு நடுவில், நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
இதை பார்க்க விரும்பினால், சிறிது துாரம் கால்நடையாக செல்ல வேண்டும். அபூர்வமான தாவரங்கள், மரங்கள், செடி கொடிகளில் இருந்து நறுமனம் வீசும் இளந்தென்றல், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான இயற்கை காட்சிகள், சலசலக்கும் ஓடைகளின் நீரை ரசித்தபடி செல்வது, மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும்.
தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் அழகை ரசிப்பதற்காகவே, சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர்.
வெட்டிங் போட்டோ ஷூட், பிறந்த நாள் போட்டோ ஷூட் எடுக்க, ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்க அற்புதமான இடமாகும். ஆனால் நீர்வரத்து அதிகம் இருப்பதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் இறங்க கூடாது.
நீர்வீழ்ச்சிக்கு அடர்த்தியான வனப்பகுதியில் செல்ல வேண்டும் என்பதால், பாதையை பற்றி நன்றாக தெரிந்த உள்ளூர் மக்களையோ அல்லது வழிகாட்டியையோ உடன் அழைத்து செல்வது நல்லது.
தேவையான உணவு, குடிநீர், ஸ்நாக்ஸ் கொண்டு சென்றால், மாலை வரை அமைதியான சூழ்நிலையில், இயற்கையுடன் பொழுதை கழித்து விட்டு வரலாம்.
எப்படி செல்வது? ஹாசன் நகரில் இருந்து, எட்டு கி.மீ., துாரத்தில் ஹாலவாகிலு நீர் வீழ்ச்சி உள்ளது. பெங்களூரில் இருந்து 182 கி.மீ., மைசூரில் இருந்து 111 கி.மீ., மாண்டியாவில் இருந்து 137 கி.மீ., தொலைவில் ஹாசன் உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்து, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. அனுமதி நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. தொடர்பு எண்: 99729 90940 அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: ரோசரி தேவாலயம், கோரூர் அணை.
- நமது நிருபர் -