/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஹாசனில் என்னென்ன பார்க்கலாம் ?
/
ஹாசனில் என்னென்ன பார்க்கலாம் ?
ADDED : டிச 25, 2025 07:20 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஹாசன் மாவட்டம் உள்ளது. இது, இயற்கை அழகும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா நகரமாகவும் விளங்குகிறது. பசுமையான மலைகள், பழமையான கோவில்கள் என பயணியரை கவரும் பல இடங்கள் உள்ளன.
மினி சுவிட்சர்லாந்து மலை, காடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர் சக்லேஸ்பூர். இங்கு, இயற்கை எழில் வழிந்து ஓடுகிறது. இயற்கை விரும்பிகளின் சொர்க்கம். 'மினி சுவிட்சர்லாந்து' என்றும் அழைக்கப்படுகிறது. காபி, ஏலக்காய் தோட்டங்கள், மூடுபனி சூழ்ந்த சாலைகள் என மனதை மயக்கும் இடமாக திகழ்கிறது. 'டிரெக்கிங்' செய்வதற்கு நிறைய மலைகள் உள்ளன. டிரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடம். புகைப்பட கலைஞர்களுக்கு வரப்பிரசாதம்.
கலைச்சின்னம் ஹாசனிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் பேலூர் உள்ளது. இங்கு உலகப்புகழ் பெற்ற சென்னகேசவா கோவில் உள்ளது. 12ம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்ட கோவில், சிற்ப கலைக்கு உதாரணமாக திகழ்கிறது. சுவர் முழுதும் செதுக்கப்பட்டுள்ள நுணுக்கமான சிற்பங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
நட்சத்திர கோட்டை திப்புசுல்தான் கட்டிய நட்சத்திர வடிவ கோட்டையாக விளங்கும் மஞ்சிராபாத் கோட்டை, சக்லேஸ்பூர் அருகே உள்ளது. கோட்டையின் மேல் பகுதியிலிருந்து சுற்றியுள்ள மலைப்பகுதிகளை பார்க்கும் போது மனதிற்குள் எழும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.
யகச்சி அணை ஹாசன் நகரத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள யகச்சி அணை, மாலை நேரங்களில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம். அணையில் இருந்து சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை கண்டு களிக்கலாம். புகைப்படம் எடுப்பதற்கு சரியான இடம்.
மலைப்பை ஏற்படுத்தும் மலைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், ஆன்மிக தலங்கள் ஆகியவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் ஹாசன். வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதற்கோ, குடும்பத்தோடு பயணம் செய்தவற்கோ ஹாசன் சிறந்த இடமாக இருக்கும். ஒருமுறை சென்றால் மீண்டும் செல்லத் துாண்டும் வகையில், இந்த மலைநாடு பயணியரை வரவேற்கிறது.
மேற்கண்ட அனைத்து இடங்களுக்கும் பொது போக்குவரத்து மூலம் செல்வது மிகவும் கடினமான காரியம். எனவே, பயணியர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வது சிறப்பு.

