/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
துஷ்டர்களை சம்ஹாரம் செய்யும் காளி ஆஞ்சநேயர்
/
துஷ்டர்களை சம்ஹாரம் செய்யும் காளி ஆஞ்சநேயர்
ADDED : மே 26, 2025 11:38 PM

பெங்களூரில் பல்வேறு இடங்களில் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இவற்றில் காளி ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனித்துவம் உள்ளது. இது 600 ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையானதாகும்.
பெங்களூரின் மைசூரு சாலையில் காளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 1425ம் ஆண்டில் சென்னப்பட்டணாவின் வியாச ராயர் என்பவர் இக்கோவிலை கட்டினாராம். பெங்களூரு உதயமாவதற்கு முன், திறந்த வெளியில் ஆஞ்சநேயர் சிலை இருந்தது.
மழையிலும், காற்றிலும் இருந்ததால் 'காளி' (காளி என்றால், கன்னட மொழியில் காற்று என, அர்த்தமாகும்) என, பெயர் ஏற்பட்டது. வாயு பகவானுக்கு பிறந்தவர் என்பதாலும், காளி ஆஞ்சநேயர் என, அழைக்கின்றனர்.
ராமாயணம்
துஷ்ட சக்திகளின் அதிபதியான ராவணனின் மகன் அக்ஷாசுரனை அழித்ததாலும், இந்த பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அக்ஷாசுரனின் தந்திரத்தால் பூலோகத்தில் பேய், பிசாசுகளின் சேட்டைகள் எல்லை மீறியதாம்.
அப்போது ஸ்ரீராமனின் உத்தரவுபடி ஆஞ்சநேயர், அக்ஷாசுரனை வதம் செய்து காலில் போட்டு மிதித்ததாக, ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற ஆஞ்சநேயர் சிலைகளின் கையில் கதாயுதம் இருக்கும். ஆனால் காளி ஆஞ்சநேயர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையின் கைகளில் தாமரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான கோவில்களில், சிலையின் முகத்தில் மட்டும் செந்துாரம் இருக்கும், ஆனால் இந்த கோவிலில் சிலை முழுதும் செந்துாரம் பூசி பூஜிக்கப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து வெண்ணெய் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த அலங்காரங்களில், ஆஞ்சநேயர் அற்புதமாக காட்சி அளிப்பார். 1995ல் 75 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டது. இது கோவிலின் அழகை அதிகரிக்கிறது.
பிரம்ம ரதம்
ஸ்ரீராமநவமி நேரத்தில் ஒன்பது நாட்கள், பிரம்ம ரத உத்சவம் நடக்கிறது. ஹனுமன் ஜெயந்தி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடக்கின்றன. மாதந்தோறும் பவுர்ணமி அன்று சத்ய நாராயணா பூஜை நடக்கிறது.
பொங்கல் பண்டிகை நேரத்தில் ஒரு மாதம், சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். அப்போது பக்தர்கள் மாலை அணிந்து, பஜனை செய்வர். பொங்கல் பண்டிகை நாளன்று, 300 கிலோ அரிசியில் புளியோதரை தயாரித்து, சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிப்பர்.
காளி ஆஞ்சநேயர் கோவிலில் சீதா, லட்சுமணன் சமேதராக ஸ்ரீராமர் காட்சி அளிக்கிறார். சத்ய நாராயண சுவாமியையும் இங்கு தரிசிக்கலாம். வாழ்க்கையில் தொடர் தோல்வியால் மனம் நொந்தவர்கள், கஷ்டங்களை அனுபவிப்போர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம்.
துஷ்ட சக்திகள் விலகி ஓடும். துஷ்ட சக்தியால் அவதிப்படும் மக்கள், கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து எந்திரம் கட்டி கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், வடை மாலை, துளசி மாலை அணிவித்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
- நமது நிருபர் -