ADDED : ஜூலை 24, 2025 06:17 AM

கார், பைக் போன்ற வாகனங்களின் ஹாரன் சத்தத்தை கேட்டு பழக்கப்பட்ட பெங்களூரு வாசிகள், குருவி, கிளி போன்ற பறவைகளின் ஓசையை கேட்டு புது விதமான உணர்ச்சியை அனுபவிக்கலாம்.
இதற்காக, பல கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய தேவையில்லை. பெங்களூருக்கு உள்ளேயே அப்படி ஒரு சிறப்பான இடம் இருக்கிறது. அதை பற்றி எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
பெங்களூரு எலஹங்கா நியூ டவுன் பகுதிக்கு அருகில் அமைதியாக இருக்கிறது அவலஹள்ளி காடு. வனப்பகுதி முழு வதும் அமைதியாகவும், பறவைகளின் ஓசைகளும் கேட்டு கொண்டே இருக்கிறது.
மலையேற்றம் இங்கு பாறைகள் சிறு குன்றுகளை போல காட்சி அளிக்கிறது. இந்த குன்றுகளில் சற்று, சிரமப்பட்டு நடந்து சென்றால் குன்றின் மீது அமர்ந்து கொண்டு, காட்டின் அழகை ரசிக்கலாம்.
இதை புதிதாக மலையேற விரும்புவோர் பயன்படுத்தி கொள்கின்றனர். எனவே, புதிதாக மலையேற விரும்புவோர் பயிற்சி பெறுவதற்கு வரப்பிரசாதமாக அவலஹள்ளி உள்ளது.
இங்கு வெளிநாட்டு, உள்நாட்டு என பல வகை பறவையினங்கள் உள்ளன. இந்த பறவைகளை பார்ப்பதற்காகவே, பலரும் வருகை தருகின்றனர்.
காட்டுக்குள் நடந்து செல்லும் போது, பறவையின் ஓசை கேட்டு கொண்டே இருக்கும். பறவைகளை படமெடுப்பதற்காகவே, புகைப்பட கலைஞர்கள் வருகை புரிகின்றனர்.
சைக்கிளிங் இங்கு, 'சைக்களிங்' செய்ய அனுமதி உண்டு. காடு பகுதிக்குள் உள்ள ஒற்றையடி பாதைகளில், சைக்கிளிங் செய்து மகிழலாம்.
சைக்கிளிங் ஆர்வமுள்ள பலரும், தங்கள் சைக்கிளுடன் வந்து காட்டுக்குள் சீறி பாய்கின்றனர். சிலர் ரேசிங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இந்த வனப்பகுதிக்குள் நுழைய ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சைக்கிள் எடுத்து செல்லலாம். மற்ற வாகனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை அழைத்து செல்லவும் அனுமதி கிடையாது. பிளாஸ்டிக், ஸ்பீக்கர், மது தடை செய்யப்பட்டு உள்ளது.
காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வனத்திற்குள் சுற்றுலாப்பயணியர் இருக்கலாம். இந்த அவலஹள்ளி வனப்பகுதி, ஜெ.கே., மர பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த வனப்பகுதிக்கு ஒரு நாளைக்கு நுாற்றுக்கணக்கில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இப்பகுதியை பற்றி பலரும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதால், காட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அப்பகுதியை சேர்ந்தோர் கூறி உள்ளனர்.
எப்படி செல்வது? பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, அரசு பஸ் மூலம் நேரடியாகவே அவலஹள்ளி வனப்பகுதிக்கு செல்ல முடியும்.
- நமது நிருபர் -