/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குளுகுளு சேலாவரா நீர்வீழ்ச்சி
/
குளுகுளு சேலாவரா நீர்வீழ்ச்சி
ADDED : ஜன 08, 2026 05:34 AM

- நமது நிருபர் -
'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என பிரசித்தி பெற்றுள்ள குடகு மாவட்டம், இயற்கையின் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாவட்டமாகும். கண்களுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை அளிக்கும் பல சுற்றுலா தலங்கள் இங்குள்ளன. சுற்றுலா பயணியர் தங்களின் குடும்பத்துடன், நண்பர்களுடன் இங்கு வருகின்றனர்.
குடகு மாவட்டத்தில், நிசர்கதாமா, தலகாவிரி, துபாரே யானைகள் முகாம், அழகான நீர் வீழ்ச்சிகள், அணைகள், காபி, தேயிலை தோட்டங்கள் என, பல்வேறு சுற்றுலா தலங்கள், சுற்றுலா பயணியரை வா வா என, கை வீசி அழைக்கின்றன.
இவற்றில் விராஜ்பேட்டில் உள்ள சேலாவரா நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். இந்த அழகான நீர் வீழ்ச்சி, காவிரி ஆற்றின் துணை ஆற்றில் இருந்து உருவானது. நீர்வீழ்ச்சி 150 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்கிறது. இது அபாயமானது. எவ்வளவு ஆழம் என்பது தெரியாது. எனவே நீரில் இறங்க கூடாது.
குளிர்காலத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில், சேலாவரா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். நீர் வீழ்ச்சியின் அருகே ஆங்காங்கே ஆமை வடிவில் பாறைகளை காணலாம். மலையேற்றம் செய்ய இளைஞர்கள், இளம் பெண்கள் அதிகம் வருகின்றனர். நீர் வீழ்ச்சியின் உச்சியில் நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான காட்சிகளை காணலாம். வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த சிறந்த இடமாகும்.
இயற்கை அழகு கொட்டி கிடக்கும் சேலாவரா நீர் வீழ்ச்சியை ரசிக்க விரும்பினால், அடர்ந்த வனப்பகுதி பாதையில் செல்ல வேண்டும். அபூர்வமான மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த வனப்பகுதி நடுவே நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஓய்வற்ற பணி நெருக்கடி, குடும்ப பிரச்னையால் மன அழுத்தத்தால் தவிப்பவர்கள், இங்கு வந்து சில மணி நேரம் துாய்மையான காற்றை சுவாசித்தால், மன அழுத்தம் மாயமாகும். அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.
நீர் வீழ்ச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், சூரிய அஸ்தமனத்துக்கு முன், திரும்பிவிட வேண்டும்.
அடர்ந்த வனம் என்பதால், இருள் சூழ்ந்துவிடும். நீர் வீழ்ச்சிக்கு செல்லும் போது, தின்பண்டங்கள், உணவு, குடிநீருடன் சென்றால் மாலை வரை இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து விளையாடி, குஷியோடு திரும்பலாம்.

