/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஒரு நாள் சுற்றுலாவுக்கு மஞ்சனபெலே அணை
/
ஒரு நாள் சுற்றுலாவுக்கு மஞ்சனபெலே அணை
ADDED : ஏப் 16, 2025 11:16 PM

பரபரப்பான நகரமாக பெங்களூரு இருந்தாலும், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான ராம்நகர், துமகூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக ஒரு நாள் சுற்றுலா சென்று திரும்பும் வகையில் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்றாக மஞ்சனபெலே அணையும் உள்ளது.
பெங்களூரில் இருந்து 40 கி.மீ., துாரத்தில் உள்ளது மஞ்சனபெலே என்ற கிராமம். இந்த கிராமத்தில் மஞ்சனபெலே அணை உள்ளது.
அர்க்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கும் இந்த அணையின் தண்ணீர் சுற்றுவட்டார கிராமங்களின், விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது.
ஏராளமான வெளிநாட்டு பறவைகளின் வசிப்பிடமாகவும் அணை உள்ளது. அணை தண்ணீரில் நடுப்பகுதியில் கூட்டம், கூட்டமாக பறவைகள் நின்று, சுற்றுலா பயணியர் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
மரங்களில் அமர்ந்திருக்கும் பல இன பறவைகளின் கீச்... கீச்.... சத்தம் மனத்திற்கு ஒரு வித அமைதியை தரும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் பருவமழையின் போது இந்த அணை நிரம்பி விடுகிறது.
அணையில் இருந்து சிறிய மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் குளித்து மகிழலாம். ஆழமும் குறைவாக தான் இருக்கும். அணையை சுற்றியுள்ள பகுதி பச்சை, பசலேன காட்சி அளிக்கும். அணையின் கரை பகுதியில் நின்று சூரிய உதயம், அஸ்தமனத்தை கண்டு ரசிப்பதும், கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அணைக்கு செல்லும் வழியில் ஏராளமான ரிசார்ட்கள், ஓய்வு விடுதிகளும் உள்ளன. சாலையோர கடைகள், ஹோட்டல்களும் இருக்கின்றன.
பெங்களூரு நகரில் இருந்து காரில் சென்றால், ஒன்றரை மணி நேரத்தில் அணை பகுதிக்கு சென்று விடலாம்.
கே.ஆர்.மார்க்கெட்டில் இருந்து பிடதி செல்லும் பி.எம்.டி.சி., பஸ்சில் சென்றால் அணையை அடையலாம். அணையில் இருந்து 5 கி.மீ., சுற்றளவிலும் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன.
- நமது நிருபர் -