/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பெங்களூரில் உள்ள தேசிய ராணுவ நினைவுச்சின்னம்
/
பெங்களூரில் உள்ள தேசிய ராணுவ நினைவுச்சின்னம்
ADDED : மே 01, 2025 05:47 AM

சுற்றுலா என்பது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுவது மட்டுமில்லை. மாறாக, பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று, நம் நாட்டின் வரலாறு, நாட்டிற்காக போர் செய்து ரத்தம் சிந்திய வீரர்களின் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதும் சுற்றுலா தான். அவ்வகையில், பெங்களூரில் உள்ள வீரபூமி என அழைக்கபடும் இடத்தை பற்றி விளக்குகிறது இக்கட்டுரை.
பெங்களூரு, வசந்த் நகர், ராஜ்பவன் சாலையில் அமைந்து உள்ளது தேசிய ராணுவ நினைவுச்சின்னம். இது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, நடந்த போர்களில் இறந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னமாக கட்டப்பட்டது. இதில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள், ராணுவ டேங்குகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு பதுங்கு குழி போன்ற இடங்கள் உள்ளன. மேலும், பச்சை புற்களுக்கு நடுவே, அருமையான நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மையப்பகுதியில், போரில் இறந்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நினைவு சின்னமாக ஒரு பெரிய அளவிலான கல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லின் மீது தேசிய கொடி பறக்கிறது. இது வீரக்கல்லு என அழைக்கப்படுகிறது.
மேலும், இங்கு வைக்கப்பட்டுள்ள ராணுவ வாகனங்களின் மூலம் இந்திய ராணுவத்தின் வரலாற்றை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு விமானங்களின் பெயர்கள், திறன்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
பூங்காவில் ஒரு பகுதியாக, சுதந்திர போராட்ட வீரரான சங்கொல்லி ராயண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஒரு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அவரது வரலாறு, வீரம், அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
மொத்தத்தில் இங்கு வருவதன் மூலம் ராணுவ வீரர்களின் தியாகம், நம் நாட்டு ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சில போர் விமானங்கள், டேங்கர்கள் போன்றவற்றை அறிய முடியும். இதுபோன்ற இடங்களுக்கு செல்லும் போது தேசப்பற்று மிகவும் அதிகரிக்கும்.
எப்படி செல்வது?
பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்திற்கு வரவும். அங்கிருந்து நடந்தே பூங்காவை அடையலாம்.
ரயில்: கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு வரலாம். அங்கிருந்து நடந்தே பூங்காவிற்கு செல்லலாம்
- நமது நிருபர் -.