/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கை தாலாட்டும் பஞ்சமி கல்லு மலை
/
இயற்கை தாலாட்டும் பஞ்சமி கல்லு மலை
ADDED : டிச 25, 2025 07:18 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம், மலைப்பகுதி மாவட்டமாகும். காபி அதிகம் விளைவதால், 'காபி களஞ்சியம்' என, பிரசித்தி பெற்றுள்ளது. நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள், இயற்கை கொட்டி கிடக்கும் வனப்பகுதிகள் உட்பட, சுற்றுலா பயணியர் விரும்பும் அனைத்தும் உள்ளது.
சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடங்களில், சிக்கமகளூரும் ஒன்றாகும். இங்குள்ள முல்லய்யனகிரி, அப்பே நீர் வீழ்ச்சி என, பல்வேறு இடங்களை சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பர். ஆனால், இங்குள்ள பஞ்சமி கல்லு மலை என்ற சுற்றுலா தலம், பலரும் அறியப்படாததாகும்.
இயற்கையுடன் சிறிது நேரம் பொழுது போக்க விரும்புவோருக்கு, இந்த இடம், 'பெஸ்ட் சாய்ஸ்'. பஞ்சமி கல்லு குறித்து தகவல் தெரியாததால், சுற்றுலா பயணியர் வந்தது இல்லை. சமீப நாட்களாக இந்த இடத்தை பற்றி, சமூக வலைதளங்களில் தகவல் கிடைத்து, சுற்றுலா பயணியர் வர துவங்கியுள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின், மேகுந்தா கிராமத்தில் பஞ்சமி கல்லு மலை உள்ளது. இது ஜெயின் மதத்தவர் சம்பந்தப்பட்ட இடமாகும். ஜெயின் சாதுக்கள் ஓய்வெடுத்த இடமாகும். மலை மீதுள்ள கல் மண்டபம், மக்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு, மூன்று கி.மீ., துாரம் ஏறி சென்று, மலை உச்சியில் நின்று பார்த்தால், சிக்கமகளூரின் அழகான காட்சிகளை ரசிக்கலாம். ஜெயின் முனிவர்களின் அடையாளங்களை இங்கு காணலாம்.
பஞ்சமி கல்லு மலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மலையை சுற்றிலும் அடர்ந்த வனம், சோவென கொட்டும் நீர் வீழ்ச்சிகள், கண்களை குளிர வைக்கும் பசுமையான காபி தோட்டங்கள் உள்ளன.
மலை உச்சியில் நின்று சூரியோதயம், சூரிய அஸ்தமனத்தை காண்பது, அற்புதமான காட்சியாக இருக்கும். வார இறுதியில் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், பஞ்சமி கல் மலையை தேர்வு செய்து கொள்ளலாம். நண்பர்கள், குடும்பத்துடன் பொழுது போக்க அற்புதமான இடமாகும்.

