/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
'டிரெக்கிங்' செல்ல ஏற்ற இடம் பாப்பராஜனஹள்ளி மலை
/
'டிரெக்கிங்' செல்ல ஏற்ற இடம் பாப்பராஜனஹள்ளி மலை
ADDED : நவ 06, 2025 12:01 AM

பெங்களூரை சுற்றியுள்ள கோலார், சிக்கபல்லாபூர், மாண்டியா, ராம்நகர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் ஏராளமான, 'டிரெக்கிங்' தலங்கள் உள்ளன. பெரும்பாலான 'டிரெக்கிங்' பகுதிகள் அதிகம் அறியப்பட்டவை தான். நிறைய பேருக்கு தெரியாத டிரெக்கிங் பாயின்ட்களும் உள்ளன. இவற்றில் ஒன்று, பாப்பராஜனஹள்ளி மலை.
கோலார் டவுனில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் உள்ளது பாப்பராஜனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற அந்தரகங்கே மலை உள்ளது. இங்கு தான் பெரும்பாலானோர் 'டிரெக்கிங்' செல்கின்றனர். இம்மலைக்கு எதிரில் அமைந்துள்ளது பாப்பராஜனஹள்ளி மலை.
இந்த மலையும் கடந்த சில ஆண்டுகளாக டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற இடமாக மாறி வருகிறது. மலை உச்சியில் சிறிய கிராமமும், கலாசார மையமும் அமைந்துள்ளது. கல்லால் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் உள்ளது.
அடிவாரத்தில் இருந்து, 'டிரெக்கிங்' செல்வோர் மலை உச்சியை அடைந்ததும், சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். மலைப்பகுதியில் பழங்கால கோட்டையும் உள்ளது.
மலை உச்சியில் தண்ணீர் தேங்கிய சிறிய குளம் உள்ளது. பாறைகள் மீது அமர்ந்து, சிறிய குளத்தின் மீது கல்லை எறிந்து விளையாடுவது மனதிற்கு அமைதி தரும். மலை உச்சியில் இருந்து கோலார் நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.
சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கும் வாய்ப்பும் உண்டு. அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு வாகனங்களிலும் செல்ல முடியும். வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் செல்வது புதிய அனுபவமாக இருக்கும்.
மலையை சுற்றி பார்த்துவிட்டு அடிவாரத்திற்கு வரும்போது தேரஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள சிவன் கோவிலும் உள்ளது.
பெங்களூரில் இருந்து பாப்பராஜனஹள்ளி 70 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. கோலார் சென்று அங்கிருந்து ஆட்டோவில் பாப்பராஜனஹள்ளி செல்லலாம். சொந்த வாகனத்தில் செல்வோர் ஓல்டு மெட்ராஸ் ரோடு வழியாக பயணம் செய்து, கோலார் சென்று அங்கிருந்து பாப்பராஜனஹள்ளிக்கு செல்லலாம்.
- நமது நிருபர் -

