/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கலபுரகியில் காண வேண்டிய இடங்கள்!
/
கலபுரகியில் காண வேண்டிய இடங்கள்!
ADDED : ஏப் 03, 2025 07:26 AM

குல்பர்கா என்றே பிரசித்தி பெற்ற கலபுரகி, கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற மாவட்டமாகும். இங்குள்ள சுற்றுலா தலங்கள், மக்களை தன் வசம் சுண்டி இழுக்கின்றன. வரலாற்று நினைவிடங்கள், புராதன கோவில்கள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், கோட்டை என, பல இடங்களை கண்டு ரசிக்கலாம்.
கலபுரகி வெயில் மாவட்டம் என, பிரசித்தி பெற்றதாகும். வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்றாலும், சுற்றுலா பயணியர் கலபுரகிக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். கலபுரகியில் பார்க்க வேண்டிய இடங்களில், பசவேஸ்வரா கோவிலும் ஒன்றாகும்.
இக்கோவில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது ஹிந்து, முகலாய பாணியில் கட்டப்பட்டதாகும்.
அற்புதமான சிற்பக்கலையை கோவிலில் காணலாம். அலங்கார சிற்பங்கள், கல்துாண்கள் கோவிலின் அழகை அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
கலபுரகியின் மக்களை கவரும் சுற்றுலா இடங்களில், கலபுரகி கோட்டையும் ஒன்றாகும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
ராஜா குல்சந்த் என்பவர், இந்த கோட்டையை கட்டினார். கலை நுணுக்கங்களுடன் காணப்படுகிறது.
கோட்டையின் உட்பகுதியில் அரண்மனைகள், மசூதிகள், அழகான பூங்காக்கள், சமாதிகள் உள்ளன. இதை சுற்றி பார்க்கவே ஒரு நாள் போதாது.
கலபுரகிக்கு மேலும் பெருமை சேர்ப்பது புத்த விஹார். 170 கம்பங்களின் மீது புத்த விஹார் நின்றுள்ளது.
அன்றைய காலத்து சிற்பக்கலையை விவரிக்கிறது.
இது, 18 ஏக்கர் பகுதியில் அமைந்துள்ளது. அமைதியை விரும்புவோருக்கு, தகுந்த இடமாகும்.
எப்போதும் பணிச்சுமை, குடும்ப பிரச்னை என, மன அழுத்தத்தால் அவதிப்படும் மக்கள், புத்த விஹாருக்கு வந்து, சிறிது நேரம் பொழுதுபோக்கினால், மனம் அமைதி பெறுவதை உணர்வீர்கள்.
- நமது நிருபர் -