/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் 'ராணி ஜரி வியூ பாயின்ட்'
/
மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் 'ராணி ஜரி வியூ பாயின்ட்'
மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் 'ராணி ஜரி வியூ பாயின்ட்'
மலையேற்ற பிரியர்களின் சொர்க்கம் 'ராணி ஜரி வியூ பாயின்ட்'
ADDED : ஆக 20, 2025 11:27 PM

மலையேற்றம் செல்வது மனிதர்களின் உடல், மனதிற்கு அதிக வலிமை தருகிறது. வேலை பளு காரணமாக மனஅழுத்தத்தில் இருப்போருக்கு, மலையேற்றம் சிறந்த தோழனாகவும் உள்ளது. கர்நாடகாவில் நிறைய மலையேற்ற தலங்கள் உள்ளன. ஆனாலும் ஒரு சில மலையேற்ற தலங்கள் அதிகம் அறியப்படாத இடங்களாகவே உள்ளன. இதில் ஒன்று தான், ராணி ஜரி வியூ பாயின்ட்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டத்தில் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. ஆனால் சுற்றுலா பயணியருக்கு முல்லையனங்கிரி, பாபாபுடன் கிரி மலைகள் தான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி என்றே அதிகம் தெரிந்து இருக்கும். சிக்கமகளூரின் கலசா டவுனில் இருந்து 21 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள, ராணி ஜரி வியூ பாயின்ட் பகுதியும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி தான்.
மலையேற்றம் செல்வோருக்கு ஏற்ற இடமாக உள்ளது. துர்கதஹள்ளி காலபைரேஸ்வர் கோவில் பகுதியில் இருந்து மலையேற்றம் துவங்கி, ராணி ஜரி வியூ பாயின்ட் பகுதியில் முடிகிறது. மலையேற்ற பாதைகளுக்கு இடையிலான துாரம் 2 கிலோ மீட்டர் தான். ஆனாலும் கரடுமுரடான பாதையில் ஏறி செல்ல குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகலாம்.
மலையேற்றம் செல்லும் போது பல வகை பறவைகளை பார்த்து ரசிக்கும் அனுபவம் கிடைக்கும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது அடிவாரத்தில் உள்ள கிராமங்கள், காபி, ரப்பர் தோட்டங்களை பார்த்து மகிழலாம். பாதை குறுகலாகவும், செங்குத்தாகவும் இருப்பதால் கவனமாக மலையேறுவது அவசியம். தனியாக செல்வதை விட ஒரு குழுவாக சென்றால், ஒருவருக்கொருவர் உதவி செய்தபடி செல்ல முடியும்.
காலை 6:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை மலையேற்றம் செல்ல அனுமதி உண்டு. இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
உள்ளூர் மக்கள் கூற்றுப்படி, திப்பு சுல்தானிடம் இருந்து தப்பிக்க, ராணி பத்மினி தேவி இந்த மலையின் உச்சியில் இருந்து குதித்ததால், மலைக்கு ராணி ஜரி என்று பெயர் வர க் காரணம். புகைப்பட கலைஞர்கள் விதவிதமான புகைப்படங்களை தங்கள் கேமராவில் கிளிக் செய்ய ஏற்ற இடமாகவும் உள்ளது.
பெங்களூரில் இருந்து ராணி ஜரி வியு பாயின்ட் 300 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கலசாவுக்கு நேரடி அரசு பஸ்கள் உள்ளன. ரயில் செல்வோர் சிக்கமகளூரு சென்று அங்கிருந்து, உள்ளூர் பஸ்கள் மூலம் கலசா செல்லலாம்.
- நமது நிருபர் -