/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
கொள்ளை அழகுடன் அப்பி நீர் வீழ்ச்சி
/
கொள்ளை அழகுடன் அப்பி நீர் வீழ்ச்சி
ADDED : ஜூன் 11, 2025 11:46 PM

மழைக்காலம் துவங்கும் முன்பே, மழை கொட்டி தீர்த்ததால், குடகு மாவட்டம், மடிகேரியின் பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது. உள் நாட்டு, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர், மடிகேரிக்கு படையெடுத்துள்ளனர்.
குடகு மாவட்டத்தின் மடிகேரி, பூலோக சொர்க்கம் என்றால் மிகையாகாது. இயற்கை எழில்களை இறைவன் தாராளமாக அள்ளி வழங்கியுள்ளார். மழைக்காலத்தில் மடிகேரி தனி அழகுடன் தென்படும்.
எனவே சுற்றுலா பயணியர் பெருமளவில் வருவர். இம்முறை கோடைக்காலத்திலேயே, பரவலாக மழை பெய்ததால், நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கிறது.குறிப்பாக அப்பி நீர் வீழ்ச்சி, சுற்றுலா பயணியரை கை வீசி அழைக்கிறது.
பசுமையான காபி தோட்டங்களுக்கு நடுவே, இயற்கையை ரசித்தபடி சென்றால், அப்பி நீர் வீழ்ச்சியை காணலாம். 80 அடி உயரத்தில் இருந்து, பாய்ந்து வரும் அழகை பார்ப்பது கண்களுக்கு விருந்தளிக்கும். பசுமையான இயற்கை காட்சிகள், காபி தோட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளதால், நீர் வீழ்ச்சியின் அழகு இரட்டிப்பாகி உள்ளது.
கோடைக்காலத்தில் நீரின்றி வறண்டிருந்த நீர் வீழ்ச்சியில், இப்போது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதே காரணத்தால் ஒவ்வொரு மழைக்காலத்திலும், அப்பி நீர் வீழ்ச்சியை பார்ப்பதை, சுற்றுலா பயணியர் வழக்கமாக வைத்துள்ளனர். நீர் வீழ்ச்சி முன் நின்று செல்பி எடுப்பது தனி அனுபவம்.
- நமது நிருபர் -