/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மனதை மகிழ்விக்கும் எர்மாயி நீர்வீழ்ச்சி
/
மனதை மகிழ்விக்கும் எர்மாயி நீர்வீழ்ச்சி
ADDED : மே 07, 2025 11:21 PM

கோடை வெயில் வறுத்தெடுக்கிறது. நீர் வீழ்ச்சியில் உடலை நனைத்தால் சுகமாக இருக்கும் என, தோன்றுகிறதா. அப்படி என்றால் எர்மாயி நீர் வீழ்ச்சிக்கு வாருங்கள். இது இயற்கை பிரியர்களின் சொர்க்கம்.
தட்சிண கன்னடா என்றவுடன், நம் நினைவுக்கு வருவது அழகான கடற்கரைகள், வரலாறு பிரசித்தி பெற்ற கோவில்கள் தான்.
அதேபோன்று இங்கு நீர் வீழ்ச்சிகளும் ஏராளம். மழைக்காலம் மட்டுமின்றி, அனைத்து பருவ காலங்களிலும் காண தகுந்தவை. இத்தகைய நீர் வீழ்ச்சிகளில், 'எர்மாயி' நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். இங்கு இயற்கை எழில் கொட்டி கிடக்கிறது.
தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், திடுபே என்ற கிராமத்தின் அருகில் எர்மாயி நீர் வீழ்ச்சி உள்ளது. 120 அடி உயரத்தில் இருந்து, கீழே பாய்கிறது.
இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலா பிரியர்கள் விரும்பும் அற்புதமான இடமாகும். அடர்த்தியான வனத்தின் நடுவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இதை காண விரும்பினால், கரடு முரடான காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
நீர் வீழ்ச்சியை அடைந்த பின், நடந்து வந்த அலுப்பும், சோர்வும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகும். எர்மாயி என்றால் உள்ளூர் மொழியில் காளைகள் மாயமான இடம் என்ற அர்த்தமாகும். முன்னொரு காலத்தில் இங்கு மேய வந்த காளைகள் திடீரென மாயமாகின. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே நீர் வீழ்ச்சிக்கு எர்மாயி என்ற பெயர் வந்தது.
எர்மாயி நீர்வீழ்ச்சி அருகில், மேலும் ஏழு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. ஒன்றை விட ஒன்று அழகாக தென்படுகிறது. பச்சை பசேல் என்ற பசுமையான மரங்கள், தாவரங்கள் சூழ்ந்துள்ள இடத்தில் அமைந்துள்ளது.
அடர்த்தியான காட்டுப்பாதையில் நடந்து செல்வது, அற்புதமான அனுபவத்தை அளிக்கும். ஓய்வற்ற பணி, குடும்ப பிரச்னை என, மண்டை குடைச்சலுடன் வாழ்வோர், எர்மாயி நீர் வீழ்ச்சிக்கு வந்தால்.
மனம் புத்துணர்ச்சி பெறும். பல்வேறு மருத்துவ மூலிகைகளில் இந்த அருவி மூழ்கி வருகிறது. இதில் குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.
தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த நீர் வீழ்ச்சியை காண வருகின்றனர். வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
கோடை விடுமுறையை கொண்டாட, சுற்றுலா செல்ல திட்டமிட்டால், உங்களின் சுற்றுலா பட்டியலில் எர்மாயியை சேர்த்து கொள்ளுங்கள். இங்கு சென்றால் தரமான ஆக்சிஜன் கலந்த காற்றை சுவாசிக்கலாம்.
- நமது நிருபர்-