/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பல போர்களை கண்ட மெடிகேசி கோட்டை
/
பல போர்களை கண்ட மெடிகேசி கோட்டை
ADDED : ஏப் 24, 2025 07:26 AM

பெங்களூரில் இருந்து 125 கி.மீ., தொலைவில் துமகூரின் மெடிகேசி கிராமத்தில் மலையின் மீது மெடிகேசி கோட்டை அமைந்து உள்ளது.
விஜயநகர பேரரசு காலத்தில் தளபதியாக இருந்த நாகி ரெட்டி, 2,581 அடி உயரம் கொண்ட இம்மலையில் 'மெடிகேசி கோட்டை'யை கட்டினார். நாகி ரெட்டியின் மனைவியின் தலைமுடி கணுக்கால்களை தொட்டதால், 'மிடிகேசி' என்று செல்லப்பெயர் வைத்து அழைத்தார்.
கன்னடத்தில் மிடி என்றால் கணுக்கால் என்றும்; கேசா என்றால் முடி என்று பொருளாகும். நாளடைவில் மெடிகேசி என மாறியது.
நாகி ரெட்டிக்கு பின், மதுகிரி, சென்னராயனதுர்கா போரில் தோல்வி அடைந்த சிக்கப்பா கவுடா, இக்கோட்டையை கைப்பற்றினார். இவருக்கு பின், 1761 ல் ஹைதர் அலி இக்கோட்டையை கைப்பற்றி, சில ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
பின், 1967ல் மராத்தியர்களுடன் நடந்த போரில், தோல்வி அடைந்தார். 1774ல் இக்கோட்டை திப்புசுல்தான் கைவசமானது. கடைசியாக, நாட்டை பிடித்த ஆங்கிலேய அரசு, லார்டு கார்ன்வால்ஸ் தலைமையில் இக்கோட்டையை கைப்பற்றியது. அதன்பின், கோட்டையை அப்படியே விட்டு விட்டனர்.
பிரமாண்டமான இக்கோட்டைக்கு ஏழு நுழைவு வாயில்கள் உள்ளன. உள்ளே பல மண்டபங்கள் உள்ளன. இவை அனைத்தும் கோட்டையின் எச்சங்களாகவே காணப்படுகின்றன. மலையில் தற்போது மூன்று வளைவுகள் கொண்ட சிதலமடைந்த மசூதியும், அதன் மீது இரு கோபுரமும் மட்டுமே உள்ளன.
மலை அடிவாரத்தில், வெங்கடரமண சுவாமி கோவில், லட்சுமி கோவில் அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து ஒரு நாள் பயணத்துக்கு இது சிறந்த இடமாகும்.
மலைக்கோட்டைக்கு செல்ல வேண்டுமானால், அடிவாரத்தில் வெங்கடரமணா கோவிலுக்கு அருகில் ஒத்தையடி பாதை உள்ளது. அனைத்தும் புற்களால் சூழப்பட்டு உள்ளது. சிறிது துாரம் சென்றதும் 75 டிகிரி சாய்வில் பாறைகள் இருக்கும்.
இதில் சிரமப்பட்டு தான் ஏறியாக வேண்டும். சிறிது துாரம் சென்றதும் பாறைகளில் 150 படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருக்கும். அதன் வழியாக, ஒரு மணி நேரத்தில் உச்சியை சென்றடையலாம். நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சென்று பார்க்கலாம்.
மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பல நுாறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீவெங்கடரமண சுவாமி கோவில்.
- நமது நிருபர் -

