/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இரட்டை அருவிகளாக கொட்டும் மகோத் நீர்வீழ்ச்சி
/
இரட்டை அருவிகளாக கொட்டும் மகோத் நீர்வீழ்ச்சி
ADDED : நவ 27, 2025 07:27 AM

உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் டவுனில் இருந்து, 17 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மகோத் வனப்பகுதியில் மகோத் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
தனி வாகனத்தில் செல்வதாக இருந்தால், எல்லாபூரில் இருந்து 30 முதல் 45 நிமிடங்களில் சென்றடையலாம்.
மகோத் நீர்வீழ்ச்சி செல்லும் பாதையில் குறிப்பிட்ட துாரம் வரை தார்சாலை உள்ளது. இச்சாலையிலும் ஆங்காங்கே பள்ளங்கள், தார் பெயர்ந்து ஜல்லி கற்களும் காணப்படுகன்றன.
அதன்பின், 2 கி.மீ., துாரத்துக்கு மண் சாலை தான். சில இடங்களில் மிகவும் மோசமாக உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளது. அங்கு நிறுத்தி விட்டு, நுழைவு கட்டணமாக ஒருவருக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அங்கிருந்து சிறிது துாரம் நடந்து செல்ல செல்ல, நீர்வீழ்ச்சியின் சத்தம் கேட்கும். இவ்வனப்பகுதியில் கங்காவதி ஆறு ஓடுகிறது.
இந்த ஆறே, இரண்டு அடுக்குகளாக நீர்வீழ்ச்சியாகிறது. முதல் அடுக்கு 50 மீட்டர் உயரத்திலும், இரண்டாவது அடுக்கில் இரு நீர்வீழ்ச்சிகள் 200 மீட்டர் உயரத்திலும் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றன.
கோடை காலத்தில் சென்றால், ஒரு நீர்வீழ்ச்சியை பார்க்கலாம். அதுவே மழைக்காலத்தில் சென்றால், ஒரே இடத்தில் இரட்டை நீர்வீழ்ச்சியை காண முடியும்.
நீர்வீழ்ச்சியை காண நான்கு 'வியூ பாயின்ட்'கள் அமைத்துள்ளது. கீழே இறங்கி செல்லச்செல்ல, நீரின் வேகத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது வியூ பாயின்டில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால், நீர்வீழ்ச்சியை காண முடியாது.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால், மாலை 5:00 மணிக்கே இருட்ட துவங்கிவிடும். எனவே, காலை நேரத்தில் இங்கு வரலாம். கோடை காலத்தில் வறண்டு காணப்படும். குளிர்காலத்தில் மேகமூட்டம், நீர்வீழ்ச்சியை மறைத்துவிடும். எனவே, நீர்வீழ்ச்சியை காண, அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை சிறந்தது.

