/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
இயற்கையின் அற்புதம் எத்தினபுஜா மலை
/
இயற்கையின் அற்புதம் எத்தினபுஜா மலை
ADDED : ஜூலை 03, 2025 05:16 AM

சிக்கமகளூரு மாவட்டம், சுற்றுலா பயணியரின் சொர்க்கம் என்றால், அது மிகையில்லை. அற்புதமான நீர்வீழ்ச்சிகள், இயற்கை கொட்டிக்கிடக்கும் அடர்ந்த வனப்பகுதிகள், மலைகள் என, சுற்றுலா பயணியர் விரும்பும் அனைத்தும் உள்ளன. இவற்றில் எத்தினபுஜா மலையும் ஒன்று.
வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் வந்தால் சிக்கமகளூரு உட்பட, சுற்றுப்புற மாவட்டங்களின் சுற்றுலா பயணியர் எத்தினபுஜாவுக்கு வருகின்றனர். சாகச பிரியர்கள், இயற்கை ஆர்வலர்களுக்கு தகுதியான இடமாகும். இந்த இடம் அற்புதமான அனுபவத்தை அளிக்கும்.
சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி தாலுகாவில் எத்தினபுஜா மலை உள்ளது. ஹிமாலய மலையை போன்றுள்ள இம்மலை, சாகச பிரியர்களின் சொர்க்கமாகும். கடல் மட்டத்தில் இருந்து 1,299 அடி உயரத்தில் உள்ளது. எத்தினபுஜா என்றால், காளை மாட்டின் முதுகு என்று அர்த்தம்.
மலையை பார்க்கும்போது, காளையின் முதுகு போன்று தென்படுகிறது. நான்கு முதல் ஐந்து கி.மீ., வரை டிரெக்கிங் செய்ய அனுமதி உள்ளது. மழைக்காலம், குளிர்காலத்தில் இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம்.
எத்தினபுஜாவின் இயற்கை அழகை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அடர்ந்த வனம், பனி மூட்டம் நிறைந்த அற்புதமான இடமாகும்.
பசுமையான சூழ்நிலை, குளிர்ந்த காற்று வீசும் பகுதியாகும். சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள் சூழ்ந்துள்ளது.
எத்தினபுஜா மலையில் சூர்யோதயம், சூர்ய அஸ்தமனத்தை பார்ப்பது, மிகவும் அற்புதமானதாக இருக்கும். இதை காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
வெட்டிங் போட்டோ ஷூட், இங்கு அதிகமாக நடக்கிறது. இயற்கையின் மடியில் அமர்ந்து போட்டோ எடுக்கின்றனர். மலையில் கேம்பிங் செய்யலாம். ஆனால் அதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஹோம் ஸ்டேக்களும் ஏராளமாக உள்ளன.
- நமது நிருபர் -