/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
சுற்றுலா அறிவிப்பு கட்டுரை சிறகடிக்கும் சிட்டுகள் போனல் பறவைகள் சரணாலயத்திற்கு போகலாமா?
/
சுற்றுலா அறிவிப்பு கட்டுரை சிறகடிக்கும் சிட்டுகள் போனல் பறவைகள் சரணாலயத்திற்கு போகலாமா?
சுற்றுலா அறிவிப்பு கட்டுரை சிறகடிக்கும் சிட்டுகள் போனல் பறவைகள் சரணாலயத்திற்கு போகலாமா?
சுற்றுலா அறிவிப்பு கட்டுரை சிறகடிக்கும் சிட்டுகள் போனல் பறவைகள் சரணாலயத்திற்கு போகலாமா?
ADDED : ஏப் 10, 2025 05:24 AM

பறவைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பறவைகள் சிறகடித்து வானில் பறக்கும் போது அதை பார்ப்பதே சுகமாக இருக்கும். இந்த பறவைகளை, அவற்றின் இருப்பிடமான சரணாலயத்தில் கண்டு களிப்பது என்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
யாத்கிர் மாவட்டம், ஷோராப்பூர் தாலுகாவில் உள்ளது போனல் கிராமம். இந்த கிராமத்தில் தான் போனல் பறவைகள் சரணாலயம் இருக்கிறது. இது, மாண்டியாவில் உள்ள ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயத்திற்கு பிறகு, மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய பறவைகள் சரணாலயம் என்ற பெருமை உடையது.
* 17ம் நூற்றாண்டு
இந்த சரணாலயம் 17ம் நுாற்றாண்டில், ஷோராப்பூரின் ஆட்சியாளரான பாம் நாயக் என்பவரால் கட்டப்பட்டது. இது போனல் என்ற குளத்தில் இருந்து துவங்குகிறது. இதன்பின், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது, ஷோராபூரின் பிரிட்டிஷ் நிர்வாகியான மெடோஸ் டெய்லரால் விரிவுபடுத்தப்பட்டது.
அப்போது, 1,600 ஏக்கர் பரப்பளவில் 12 அடி சராசரி ஆழத்துடன் விரிவுபடுத்தப்பட்டது. இதை அவர் தன் சுயசரிதை நூலான ' தி ஸ்டோரி ஆப் மை லைப்' எனும் புத்தகத்தில் எழுதி உள்ளார்.
இங்கு 12 பெரிய நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இது அதிக அளவிலான பறவைகளை ஈர்க்கும் சக்தியாக உருமாறியது. அதுமட்டுமின்றி, இங்கு உள்ள நீர் தேக்க தொட்டிகளில் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
* அங்கீகாரம்
இதன்பின், 1998ம் ஆண்டில், மாநில அரசு மீன்பிடிக்க தடை விதித்து, பாதுகாக்கப்பட்ட வனத்துறையின் கீழ் கொண்டு வந்தது. 2010ம் ஆண்டில் போனல் பறவைகள் சரணாலயமாக மாநில அரசு அங்கீகரித்தது.
பல வகையான புலம் பெயர்ந்த பறவைகள் ஏரிக்கு வருகின்றன. இந்த சரணாலயத்தில் அடிக்கடி வரும் பறவைகள் ஊதா நிற ஹெரான், வெள்ளை கழுத்து நாரை, வெள்ளை ஐபிஸ், கருப்பு தலை ஐபிஸ், சிவப்பு தலை ஐபிஸ், டார்ட்டர், பட்டை தலை வாத்து, ஊதா மூர்ஹென், இந்திய மூர்ஹென், பெரிய கொக்கு, குளம் ஹெரான் ஆகியவை அடிக்கடி வரும் விருந்தினர்களாக உள்ளன.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வருவோர் அருகில் உள்ள மற்ற இடங்களை கண்டு களிக்கலாம். இந்த சரணாலயத்திலிருந்து 45 கி.மீ., தொலைவில் துாங்கும் புத்தர் மலை உள்ளது. இது நான்கு சிறிய மலைகள் சேர்ந்த தொகுப்பாக உள்ளது. மற்றும் யாத்கிர் கோட்டை 65 கி.மீ., தொலைவிலும், பசவசாகர் அணை 73 கி.மீ., தொலைவிலும் உள்ளன.
* எப்படி செல்வது?
பஸ்: பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து யாத்கிர் பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து டாக்சி மூலம் சரணாலயத்தை அடையலாம்.
ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து, யாத்கிர் ரயில் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து டாக்சி மூலம் சரணாலயத்தை அடையலாம்.
***
- நமது நிருபர் -