/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற துமகூரின் மந்தாரகிரி
/
ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்ற துமகூரின் மந்தாரகிரி
UPDATED : பிப் 27, 2025 01:06 PM
ADDED : பிப் 20, 2025 06:50 AM

பெங்களூரில் இருந்து ஒரு நாளில் சென்று வருவதற்கு ஏற்ற இடமாக உள்ளது மந்தாரகிரி மலை. நகரில் இருந்து 60 கி.மீ., துாரத்தில் துமகூரு அருகே உள்ளது மந்தாரகிரி மலை. பெங்களூரில் இருந்து காரில் சென்றால் இந்த மலைக்கு ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.
மலை அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளது. அந்த இடத்திலேயே மயிலிறகு வடிவில் அமைக்கப்பட்டுள்ள குரு மந்திரம் உள்ளது. அங்கு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
பின், மலை அடிவாரத்தில் பசுமையான புல்வெளி மீது அமர்ந்து குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டு மகிழலாம். செல்பி புகைப்படங்களும் எடுத்துக் கொள்ளலாம்.
அடிவாரத்தில் இருந்து 400 படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் மலை உச்சியை அடையலாம். படி ஏறிச் செல்லும்போது கால்கள் வலித்தால், மலை மீது அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
மலை உச்சிக்கு சென்ற பின், மேலிருந்து கீழே பார்க்கும்போது கிராமங்களின் அழகு கண்களை கொள்ளை கொள்ளும். மலை உச்சியின் வலது பக்கம் சற்று தூரம் நடந்து சென்றால் அங்கிருந்து அழகான ஏரியை கண்டு ரசிக்கலாம்.
![]() |
மாலை 4:30 பணிக்கு மேல் சில்லென்று காற்று வீசும். மலை மீது அமர்ந்து குடும்பத்தினருடன் பேசும்போது ஏதோ மனபாரம் குறைவது போன்ற உணர்வு ஏற்படும். சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு மெதுவாக மலையில் இருந்து கீழே இறங்கி தங்கள் வாகனங்களில் புறப்பட்டு வரலாம்.
பெங்களூரில் இருந்து காரில் செல்பவர்கள், துமகூரு ரோட்டில் சென்று நெலமங்களா, டாபஸ்பேட் வழியாக மலையை சென்றடையலாம். பஸ்சில் செல்பவர்கள் டாபஸ்பேட்டில் இறங்கி அங்கிருந்து ஆட்டோக்களில் செல்லலாம்