/
ஸ்பெஷல்
/
அறிந்துகொள்வோம்
/
ஐம்பெரும் காப்பியங்கள்.. தமிழ் வளர்ப்போம்...!
/
ஐம்பெரும் காப்பியங்கள்.. தமிழ் வளர்ப்போம்...!
UPDATED : ஆக 23, 2022 02:38 PM
ADDED : ஆக 23, 2022 02:34 PM

தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
- வழக்குரை காதையில் வரும் இந்த சிலப்பதிகார பாடல் வரிகள் 70, 80, 90'களின் தமிழின் மீது ஆர்வமும், பற்றும் உள்ள அனைவருக்கும் விருப்பமான ஒன்றாகும். இன்றும் கூட தமிழ் இலக்கண படிப்பை முறையாக படிக்காதவர்களும், பள்ளி காலத்தில் படித்த இந்த பாடல் வரிகளை வார்த்தை பிறழாமல் கூறுவர். மேடை நாடகம், நாட்டியங்களிலும் சிலப்பதிகார கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
![]() |
ஆராய்ந்து பார்க்காத மன்னா! நான் சொல்வதைக் கேள். என் நாட்டு வேந்தன் பறவைக்கே துன்பம் தீர்த்தவன். என் நாட்டு வேந்தன் பசுவின் துன்பத்தைப் போக்கத் தன் மகனையே தேர் ஏற்றிக் கொன்றவன். அவன் ஊர் புகார் நகரம் என் ஊர். அவ்வூர் வணிகன் மாசாத்துவான். அவன் பிறர் பழிக்காத சிறப்பினை உடையவன். புகழ் பெற்ற அவனுக்கு மகனாகப் பிறந்தவன் என் கணவன்.
வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம். என் கால் சிலம்பினை விற்பதற்காக அவர் வந்தார். உன்னால் கொலைக்களத்தில் மாண்டுபோனார். அவர் பெயர் கோவலன். அவர் மனைவி நான். என் பெயர் கண்ணகி என்பதே இதன் பொருளாகும்.
![]() |
கோவலன் தன் மனைவி கண்ணகியுடன் பொருள் தேட மதுரைக்குச் செல்கிறான். அங்குள்ள ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக இருக்கச் சொல்லி, அவளின் காற்சிலம்பை விற்று வருவதற்காக, மதுரை நகரக் கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு அரண்மனைச் சிலம்பைத் திருடிய பொற்கொல்லனின் சூழ்ச்சியால், கோவலன் திருடன் எனக் கருதப்பட்டு அரசன் ஆணைப்படி கொலை செய்யப்படுகிறான். இதையறிந்த கண்ணகி, கடும்கோபமுடன் பாண்டியன் அரசவைக்குச் சென்று வழக்காடி, கோவலன் கள்வன் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறாள். உண்மையை உணர்ந்த பாண்டிய மன்னனும் அக்கணமே, தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்துகிறான். இப்படியாக செல்கிறது சிலப்பதிகாரம்.
பழந்தமிழ் இலக்கியங்களில் எப்போதும் காப்பியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தெய்வம், உயர்ந்த மக்கள் மற்றும் முக்கிய கதை தலைவர்களை கொண்ட நீண்ட செய்யுள் ஆகும். அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய நான்கு வகையான உறுதிப்பொருள்கள் அடங்கியவை காப்பியம் ஆகும். இதன் அடிப்படையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின. இவற்றில் சிலப்பாதிகாரமும், மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டு கதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை மட்டுமின்றி, சமகாலத்தில் தோன்றியதாகும். பிற மூன்றும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் ஆகும். மூன்றாவதான சீவகசிந்தாமணி, விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம். மேலும், காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது. நான்காவதாக உள்ள வளையாபதியில், விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம். கடைசியாக உள்ள குண்டலகேசி சமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும்.
![]() |
அணிகலன் பெயர்களில்...
இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
சிலப்பதிகாரம்
சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி. கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு.
மணிமேகலை
ஆடை நழுவாமலிருக்க பெண்கள் இடுப்பில் அணியும் அணி. மணிமேகலை என்ற பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு.
குண்டலகேசி
குண்டலம் என்பது பெண்கள் அணியும் காதுவளையம். குண்டலமும் கூந்தல் அழகும் கொண்ட குண்டலகேசியின் வரலாறு கூறும் நூல்.
வளையாபதி
வளையல் அணிந்த பெண் வளையாபதியின் வரலாறு கூறும் நூல்.
சீவக சிந்தாமணி
சிந்தாமணி என்பது அரசனின் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு.
![]() |
காப்பியத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் இடம் பெற்றிருந்தாலும், அறத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் இளங்கோவடிகள். மக்களிடம் அறம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாடப்பட்டுள்ளது இந்த ஐம்பெரும் நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம். மேலும், சிலப்பதிகாரத்துக்கு முன்பு தமிழ் இலக்கியத்தில் அகத்திணை, புறத்திணைப் பாடல்களே இருந்தன. அவை தனிமனித உணர்ச்சி, கடமைகளை பொதுமையில் நின்று உணர்த்தின. ஆனால் ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் சுட்டிக்காட்டி, சமுதாயத்தை வழி நடத்திச் செல்லும் முயற்சியாக சிலப்பதிகாரம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், முத்தமிழ்க் காப்பியம் எனவும் போற்றப்படுகிறது.
இதிலுள்ள மூன்று நீதிகள்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர். ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும் என்னும் மூன்று உண்மைகளைக் கருப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது இந்த காப்பியம்.