PUBLISHED ON : அக் 26, 2025

சமூகம் உணர வேண்டிய ஆண் பாவம்!
'எல்லா ஆண்களும் நல்லவர்கள் என்று நான் சொல்லவில்லை; அதேபோல், எல்லா பெண்களும் நல்லவர்கள் இல்லை! சீதை இருக்கும் ராமாயணத்தில் தான் சூர்ப்பனகையும் இருக்கிறாள்' என்று சகாதேவனான ஆசிப் அலி நீதிமன்றத்தில் சொல்வது, கட்டு பிரிக்கும் போதான சந்தோஷத்தை காயப்பட்டவர்களுக்கு நிச்சயம் தரும்!
என்ன ஒன்று... இந்த ரசனைக்குரிய காட்சிக்காக 'க்ளைமாக்ஸ்' வரை பொறுமையாய் காத்திருக்க வேண்டும்! இதில் சூர்ப்பனகையாக சகாதேவனின் மனைவி; தன் கனவை நிறைவேற்ற கணவனின் கனவை கொளுத்த துணியும் அரக்க குணம் அவளுக்கு!
இக்குணத்தை நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கி, ஆண்களின் துயரத்தை தன் வழியே சகாதேவன் அழுத்தமாய் சொல்லும் கதை!
'என்னவிதமான சட்டப்பிரிவு இது' என, பெண்களுக்கு பாதுகாப்பு தரும் '498 ஏ' பிரிவை நோக்கி சகாதேவன் வீசும் கேள்விகளுக்கு திரைக்கதையின் நீதிமன்றம் பதில் சொல்ல முடியாமல் தவிப்பது, நாம் கடந்து வந்த உண்மை செய்திகளை நினைவூட்டி மறு ஆய்வு செய்யச் சொல்கிறது!
'ஓர் ஆணிடம் இல்லாத ஒரு குணத்தை அவனிடம் இருப்பதாக திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம், அவன் மகளையே அவனை வெறுக்கச் செய்ய முடியும்' என்பதை நிறுவ, 'கணவன் - மனைவி - குழந்தை - பயம் - பாசம் - கண்ணீர்' வைத்து காட்சி பின்னி மனம் நெகிழ வைக்கிறது ஒளிப்பதிவு!
'குடும்பத்தில் ஓர் ஆண்மகனால் நிகழும் பெண் மரணத்தை கொடும் குற்றமாக பார்க்கும் இச்சமூகம், ஒரு பெண்ணால் நிகழும் ஆண் மரணத்தை அதே வீரியத்துடன் பார்க்கிறதா; 'வரதட்சணை குற்றம்' எனச் சொல்லும் சட்டம், மணமேடையில் நகை போர்த்திய நெஞ்சோடு நிற்கும் பெண்ணிடம் ஏன் கேள்வி எழுப்பு வதில்லை?' - 'இந்த இரு கேள்விகளுக்கும் பதில் இல்லை' என்பவர்களுக்கு இப்படம்... பிரசாதம்; 'இதுதான் பதில்' என எதையாவது துப்புவோருக்கு... குப்பை.
ஆக..
'ஆண்கள் ஜாக்கிரதை' எனும் பெண்களும், 'பெண்கள் பாவம்' எனும் ஆண்களும் பார்க்க வேண்டிய படம்!

