
கரும்பின் நுனி போல் துவக்கம்; அடி போல் நிறைவு!
துறவு வாழ்வை விரும்பும் கணவனுடன் ஜான்சி குரியன்; காவல் உதவி ஆய்வாளர். விவாகரத்து கோரும் மனைவியுடன் ஹரீஷ்; காவலர். ஓர் இரவின் ரோந்துப்பணியில் இருவரது அலட்சியம் பணிக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது. நிகழும் இரவு சம்பவத்தின் முழுமையை கண்டறியும் ஜான்சி - ஹரீஷின் முயற்சியே கதை!
மலையும், மழையும் கொண்ட கேரளத்தின் இடுக்கியை களமாக கொண்டபின், 'த்ரில்லர்' கதைக்கு வேறென்ன அலங்காரம் வேண்டி இருக்கிறது. நீதிபதி வீட்டில் கைவரிசையை காட்டிய திருடன், தீ வைத்துக் கொண்ட 18 வயது பெண் கடந்து மு க்கிய சம்பவத்திற்கு கதை வரும் போது, ஜான்சி - ஹரீஷ் குணாதிசயம் குறித்து நாமொரு கருத்துக்கு வந்துவிட முடிகிறது!
சாறு பிழியும் இயந்திரத்திற்குள் நுழைக்கப்படும் கரும்பாக சம்பவங்களை நிதானமாக நுழைக்கிறது ஷாஜி மராடின் கதை. காவலர்கள் இருவரும் ஆதாரங்களைத் திரட்ட திரட்ட நம் வயிற்றுக்குள் கரும்பு சாறு இறங்குகிறது. திரட்டிய ஆதாரங்கள் இவர்களின் கறையை கழுவினாலும், குற்றவாளிக்கு பெரிய பாதிப்பில்லை எனும்போது, 'இன்னும் நான் அடிக்கரும்பை நுழைக்கவே இல்லை' என்கிறார் இயக்குனர் ரதீனா!
கஞ்சா புகைக்கும் இளைஞன் பார்த்ததாக நம்பும் மாயத்தோற்றம், அவன் சிகிச்சை பெறும் மறுவாழ்வு மையம் - கடுகளவு இடம்பெறும் இக்காட்சிகளை ஸ்ரீஜித் சாரங் வெட்டி ஒட்டிய விதமே அடிக்கரும்பின் ருசிக்கு காரணம். ஜான்சி - ஹரீஷ் அப்படியொன்றும் வழக்கை சிறப்பாக விசாரித்து விடவில்லைதான்; ஆனால், கதையை எழுதிய விதத்தால் இந்த 'த்ரில்லர்'தித்திக்கி றது.
ஆக...
அடர்த்தியில்... நாவலின் ஆன்மா; முடிவுரையில்... சிறுகதையின் ஆன்மா; பாதிராத்ரி ... நல்ல சிறுகதை!

