
அப்பாவும் நானும் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினோம்.
'டீ கடையா... 'அலிப் அராபியன் சாய்' கடைக்குப் போங்க; மொத்தம் 100 வகை டீ; தினமும் ஆறு வகை கண்டிப்பா இருக்கும்!' முகவரி கேட்க நிறுத்தப்பட்ட உள்ளூர்க்காரர் அன்பாய் முழு விபரமும் தந்துவிட்டு நகர்ந்தார்.
'கருஞ்சீரகம், கிராம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய் சேர்த்த காவா; இது அரபு நாடுகள்ல பிரபலம்!' - ரசித்து காபி உறிஞ்சிக் கொண்டிருந்தவரை வாடிக்கையாளராய் மாற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அருகில் சென்றேன்.
'அப்போ, நெல்லிக்காய் டீ சாப்பிடுங்க. காட்டுநெல்லி சாறோட வெந்தயம், மஞ்சள் துாள் கலந்து கமகமன்னு இருக்கும்!' - அப்பாவின் சர்க்கரை வியாதி அறிந்து பொறுப்பாய் பரிந்துரைத்தார். எனக்கு அன்னாசிப்பழ தேநீர்; எனக்குப் பின்னவருக்கு கறுப்பு திராட்சை தேநீர்.
'உங்க அம்மாவுக்கு கடையில நின்னு டீ குடிக்க ரொம்ப பிடிக்கும்' என்ற அப்பாவின் முதிர்காதலை ரசித்தபடியே, எனது தேநீரில் மிதந்து கொண்டிருந்த மெல்லிய அன்னாசிப்பழ துண்டுகளை உறிஞ்சி ருசித்தேன்; ஆஹா... புது அனுபவம்!
'நீயும் ஒன்னு வாங்கி குடிச்சா என்ன?' - மாஸ்டரின் குரல் பாய்ந்த திசையில் எல்லோரும் பார்க்க, காதலி தேநீர் உறிஞ்சுவதை உயிர் வழிய பார்த்துக் கொண்டிருந்த முகத்தில்... மலைக்கோட்டையின் அளவை விஞ்சிய வெட்கம்!
அந்த காதலன் நீங்களா?
98424 99861