
'அம்மா...' என்று அழைக்கிறார் ஸ்ரீ வர்ஷா. நிமிர்ந்து பார்க்கும் பத்மாகுமாரின் முகத்தில் படர்ந்து நிற்கிறது தாய்மை.
இந்த வார...
சிலை: ஸ்ரீ வர்ஷா, பிளஸ் 1
சிற்பி: பத்மாகுமார், தமிழாசிரியை
கருவறை: சர்.சிவசாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர், சென்னை.
'அம்மா'ன்னு தான் கூப்பிடுவீங்களா?
தமிழ் பாடம் எடுக்குறதால மட்டுமில்ல... வீட்டுல உணர்ற அம்மாவோட அருகாமையை இவங்க வகுப்புலேயும் நாங்க உணர்றதால, 'அம்மா'ன்னு தான் கூப்பிடுவோம்.
தான் செதுக்கிய சிலை பேசுவதை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கும் பத்மாகுமாருக்கு பூர்வீகம் தஞ்சாவூர். துவக்கப்பள்ளி ஆசிரியையாய் பணி துவக்கி முதுகலை பட்டதாரி ஆசிரியையாய் உயர்ந்திருக்கும் இவருக்கு, கற்பிக்கும் பணியில் இது 35வது ஆண்டு; இப்பள்ளியில் மட்டும் 18 ஆண்டு அனுபவம்!
ஸ்ரீ வர்ஷாவின் ஞாபகசக்தி எப்படி?
'செல்லங்களா... நான்தான் உங்க தமிழம்மா'ன்னு இவங்க எனக்கு அறிமுகமான விதம் மனசுல இன்னும் ஈரமா இருக்கு. 'உன் தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு'ன்னு அன்னைக்கு என்னை பாராட்டினாங்க. என் விரல் பிடிச்சு இவங்க வழிகாட்ட ஆரம்பிச்சதுமே தமிழ்ப்பாடத்தை நேசிக்கத் துவங்கிட்டேன். நான் சொல்றது சரிதானேம்மா?
சிலை கேட்டதும் ஆமோதித்தபடியே, 'ரொம்ப சந்தோஷமா இருக்குடா' என ஸ்ரீவர்ஷாவின் தலை வருடுகிறார் சிற்பி.
இந்த தமிழம்மாவின் தனித்துவம் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுல முதல் மாணவியா சாதிச்சப்போ, 'உன்னால உன் பெற்றோருக்கு பெருமை; பள்ளிக்கு பெருமை'ன்னு சொன்னாங்களே தவிர, என் வெற்றிக்கு தன்னை ஒரு காரணமா அவங்க முன்னிறுத்தலை. அதனால, இப்போ பிளஸ் 1 வகுப்புல என் விருப்ப மொழிப்பாடம்... தமிழ். இந்த தமிழம்மாவால இன்னைக்கு நான்... பள்ளி உதவி பொது தலைவர்.
ஸ்ரீ வர்ஷாவின் புரிதலால் தமிழம்மாவின் முகத்தில், 'தன் பிள்ளையை நன்றாக வளர்த்திருக்கிறோம்' எனும் தாயின் பூரிப்பில் தெறிக்குமே... அதே புன்சிரிப்பு.
உளியின் மொழி
'படிப்பு மட்டுமே உயர்த்தி விடாது; செயலில் ஒழுக்கமிருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்!' - இது, மரத்தடி வகுப்புல என் ஆசிரியர் எனக்கு கற்றுத்தந்த பாடம். 'ஜீவன் இருக்குற வரைக்கும் இந்த பாடம்தான் சுவாசமா இருக்கணும்'னு என் மாணவர்களுக்கும் இதை நான் போதிக்கிறேன். எனக்கு ஒரு பேராசை இருக்கு; 'மிகச்சிறந்த சாதனையாளர்'னு என் மாணவ மாணவியர்ல ஒருத்தரை இந்த உலகம் பாராட்டணும்; அடுத்த ஆண்டு என் பணி ஓய்வுக்கு முன்னால அதை நான் கேட்கணும்!'
- ஆசிரியை பத்மாகுமார்.