PUBLISHED ON : மார் 16, 2025

'மகளிர் உரிமைத்தொகை' பெறும் 'தகுதியுள்ள' தமிழச்சியும், 'டாஸ்மாக்'கில் அன்றாடம் புரண்டு வரும் 'தன்மான' தமிழனான அவள் கணவனும்...
'தி.மு.க., எம்.பி.,க்களை 'நாகரிகமற்றவர்கள்'னு மத்திய அமைச்சர் சொன்னது ஒட்டுமொத்த தமிழர்களை அவமானப்படுத்தின மாதிரி'ன்னு சொல்ற நீ, எந்த கையில சோறு திங்கணுங்கிறது மறந்து போற அளவுக்கு 'டாஸ்மாக்'ல குடிச்சிட்டு வந்திருக்கே; உன்னோட இந்த அவமானத்துக்கு காரணமான 'நாகரிகமானவர்கள்' யாருன்னு சொல்லேன்?'
'ஏய்... இங்கே பாரு... உனக்கு மாசா மாசம் 1,000 ரூபாய் படியளக்குற...'
'அடச்சீ... நிறுத்து; நீ இப்படி சம்பாதிக்க வக்கில்லாம சுத்துறதாலதான், 'மு.க.ஸ்டாலின் அண்ணன் தர்ற இந்த சீதனம்' என்னைத் தேடி வருது. நீ மட்டும் நல்லா சம்பாதிச்சிருந்தா, இந்த சீதனத்தை வாங்கித் தர்ற 'தகுதியுள்ள பெண்'ங்கிற அடையாளம் என் மேல விழுந்திருக்காது தெரியுமா?'
'அதென்னடி பொசுக்குன்னு 'அண்ணனின் சீதனம்'னு சொல்லிட்டே?'
'உரிமைத்தொகை வாங்குறவங்க இப்படி சொல்றதாத்தான் முதல்வர் சொன்னாரு; அதான், நானும் சொன்னேன். இப்போ, மலையாளத்தை கூடுதல் மொழியா கத்துக்கிட்டு 'சாகித்ய அகாடமி' விருது ஜெயிச்சிருக்கிற நெல்லை பேராசிரியை விமலாவை பாராட்டிக்கிட்டே, 'தமிழகத்திற்கு இருமொழி கொள்கைதான்'னு உறுமுறதை நீ நம்புறேல்ல... அந்த மாதிரிதான் இதுவும்!'
'நீயும் பகுத்தறிவோட பிரமாதமா பேசுறேடி; குடிகாரன் சம்சாரம்னா சும்மாவா...'
'இதென்னய்யா பிரமாதம்... 'எதையுமே ஆதரிச்சு எழுதாம விமர்சிச்சு மட்டுமே எழுதினா, அந்த விமர்சனங்களுக்கு மதிப்பே இருக்காது'ன்னு, 'நடுநிலை பத்திரிகை தர்மம்' பற்றி விகடன் மேடையில அறிவுறுத்துன நம்ம முதல்வர், உலகமே கொண்டாடுற நம்ம பிரதமரை எதற்கெல்லாம் ஆதரிக்கிறார்'னு 46 மாதங்களா இடைவிடாம யோசிச்சிட்டே இருக்கு என் பகுத்தறிவு!'
'நிறைய சிக்கியிருக்குமே...'
'அய்யா பார்த்துக்கோங்க... அம்மா பார்த்துக்கோங்க... எம் புருஷன் மூளைக்காரன்... மூளைக்காரன்... மூளைக்காரன்!'