நாங்க என்ன சொல்றோம்னா...: நாராயணீன்டே மூணான்மக்கள் (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: நாராயணீன்டே மூணான்மக்கள் (மலையாளம்)
PUBLISHED ON : மார் 16, 2025

எப்போது மூச்சை நிறுத்திக் கொள்வாய் அம்மா?
வயதிலும் மனதிலும் முதிர்ந்த மூன்று ஆண்கள் தாயின் மரண விளிம்பில் கூடி, அவளது மரணத்திற்கு முன் பிரியும் கதை. இடைப்பட்ட காலங்களில் களம் காணும் மூவரது உணர்வுகளின் ஆட்டத்தை, காந்தமாய் கண்கள் ஈர்க்கஒளிப்பதிவு மிக முக்கிய காரணம்!
'உயிர் ஒட்டி இருப்பதற்கு அடையாளமாய் என் மூச்சு மட்டுமே' என அசைவற்று கிடக்கும் விரல் பற்றி, இரண்டாவது மகனான ஜோஜு ஜார்ஜ் தன் ஈர விழிகளோடு ஈன்ற மனதிடம் பேசுகையில், அதைப் பார்ப்பதாய் மூத்த மகனையும் இளைய மகனையும் நமக்கு காண்பித்து நகரும் கேமராவோடு ஒட்டிக் கொண்டு போகிறது நம் இதயம்!
இசைக்கு அவசியமற்ற காட்சி அமைப்புகள்; இமைகள் அசைவதையும், இதழ்கள் பிரிவதையும், நிழல் விழுவதையும், நிலா இல்லா இரவுகளையும் இசை போல் இழைத்திருக்கும் இயக்கத்தால், ரசிக்கும் மனம் புல் போலவும், காட்சிகள் அனைத்தும் புல் மீது உறையும் பனித்துளி போலவும் இருப்பதாய் உணர்வு; மூன்று மகன்களின் முகபாவங்களில் சிறகு முளைத்து சிலிர்க்கிறது புல்!
நொடிப்பொழுதில் குணம் மாறும் மனித மனதின் அழகைச் சொல்ல... அடுப்பில் கொதித்து மணக்கும் மீன் குழம்பு; அவலத்தைச் சொல்ல... அடுத்த சில நொடிகளில் அதே அடுப்பில் மரிக்கும் அதே குழம்பு; ப்பா... வாசமும், நாற்றமும் நாசி துளைக்கின்றன!
க்ளைமாக்ஸ்; கோபம், வருத்தத்தின் துாண்டுதலில் ஊருக்கு கிளம்பும் இளைய மகனையும், அவனது குடும்பத்தையும் சுமந்து விரையும் வாகனம், ஓர் அவசர தகவலால் நடுவழியில் நின்று மீண்டும் வீடு திரும்புகிறது; அவ்வளவுதான். இந்த இடத்தில்...
'இதுநாள் வரை நான் மூச்சுவிட காரணம்... என் மகன்களின் ஒற்றுமை' என நாராயணி அம்மா சொல்வதாய் உணர்ந்தால் மட்டும்... செம படம்.
ஆக...
மனதைச் செதுக்கும் மகத்தான படைப்புகளின் வரிசையில் இதற்கும் ஓர் இடம் தாராளமாய் ஒதுக்கலாம்!