
'நெசவு கலைஞர்' என்றதுமே நம் கற்பனையில் முன்வந்து நிற்பது கைத்தறியும், கூடவே ஒரு வயதானவரும்; இப்படியான நமது துருப்பிடித்த சிந்தனையை மாற்ற முயற்சிக்கிறது... இந்த 'ஸ்டார்ட்அப்' நிறுவனம்.
இந்த வார மனம் கொத்தி...
கலையரசி ராமச்சந்திரன்
அடையாளம்: ராட்டை
முகவரி: ஈரோடு
வீட்டுக்கு வீடு கைத்தறிகள் இயங்கிய ஈரோடு மாவட்டம் தருமாபுரியில் நெசவாளர் மகளாக பிறந்தவர் கலையரசி. திருமணத்திற்கு பிறகு சென்னையில் வாழ்க்கை. 'தினமும் 150 ரூபாய் சம்பாதிக்கிறதே பெரும் சவாலா இருக்குறதால நிறைய பேர் நெசவு தொழிலை விட்டுட்டு கூலி வேலைக்குப் போயிட்டாங்க' எனும் ஊர்க்காரரின் வருத்தமே, இவர் 'ராட்டை'யை உருவாக்க காரணம்!
கையடக்க மூன்றுவித கைத்தறிகளையும், பருத்தியில் இருந்து நுாலை பிரித்தெடுக்க உதவும் 'ஸ்பின்ப்ளூ' குச்சியையும் கலையரசி உருவாக்கி இருக்கிறார். இவரது முன்னாள் அடையாளம்... ஐ.டி., ஊழியர்; 2019 முதல் 'ராட்டை'யின் நிறுவனர்.
உங்கள் முயற்சி கைத்தறி நெசவின் ஆயுளை நீட்டித்து விடுமா?
நான் தயார் பண்ணியிருக்கிற 'வீவ்மேட்' கைத்தறி மூலம் பணப்பை, சுவர் தோரணம், 'காபி கோஸ்டர்' எல்லாத்தையும் சிறுவர்கள் உருவாக்கலாம்.
15 வயதிற்கு மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடிய 'வீவ்அல்லி' கைத்தறி மூலமா கைக்குட்டை, கைப்பைகளை உருவாக்க முடியும். 'வீவ்பிட்' கைத்தறி மூலமா துண்டு, துப்பட்டான்னு தயார் பண்ணலாம். இதன்மூலமா, மக்களுக்கு நெருக்கமானதா கைத்தறி நெசவு மாறும்னு நம்புறேன்.
கலையரசியின் நம்பிக்கை வீண் போகவில்லை. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இக்கைத்தறிகளை ஆர்வமுடன் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அவர்களின் செல்போன் பயன்பாடு குறைந்திருப்பதாகவும், கவனக்குவிப்பு திறன் மேம்பட்டிருப்பதாகவும் பெற்றோர் புன்னகைப்பதாக பூரிக்கிறார் கலையரசி.
இவரது கைத்தறி கருவிகள் குறித்த பயிற்சிகள் 'ராட்டை'யின் 'யு டியூப்' பக்கத்தில் உள்ளன. இக்கருவிகளோடு இயற்கை சாயமேற்றப்பட்ட பருத்தி, ஆளி, வாழை நார் நுால்களையும் ராட்டை தயாரிக்கிறது.
'ஸ்டார்ட்அப்பின் துவக்கப்புள்ளி' - எதை சொல்வீர்கள் கலையரசி?
கள ஆய்வு ரொம்பவே முக்கியம்; தேவைகளை சரியா கணிச்சு இறங்கினாத்தான் இதுல வெற்றியை ருசிக்க முடியும்.
மனதில் இருந்து...
'எனக்கு தேவையான சிறிய துணிகளை 'ராட்டை' தறிகள் உதவியோட என் முயற்சியில நானே உருவாக்குறப்போ கிடைக்கிற சந்தோஷமும், நம்பிக்கையும் வார்த்தைகளால சொல்ல முடியாத அற்புதம்!'
- மவுனிகா, பயனாளர்.