PUBLISHED ON : பிப் 16, 2025

தாமதமாய் அறிந்தாலும் விரைந்து தெளிந்து வரும் தமிழகத்தில், சீர்திருத்தம் விரும்பும் சிறுவர்களின் சீரிய சிந்தனை தெறிக்கும் ஒரு மேடை...
ஈ.வெ.ரா., மண்ணில் உம்மோடு உறங்கி விழிக்கும் நினைவு?
'தி.மு.க., - அ.தி.மு.க.,வோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை; இவற்றோடு உறவு வைத்துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாக கூட்டத்தில் ஜூலை 2, 1975ல் காமராஜர் பேசியது!
ஈ.வெ.ரா., மண்ணில் உமக்கு ஏற்படும் பெரும் வியப்பு?
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களும், அதிகாரிகளும், கைது நடவடிக்கையின் போது தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் போல் தவறி விழுந்து கால் கையை உடைத்துக் கொள்ளாமல் கவனமாய் இருப்பது!
ஈ.வெ.ரா., மண்ணில் உமக்கிருக்கும் ஆழமான ஐயம்?
'இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு; அரசின் நலத்திட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இன்னுமா முன்னேறவில்லை' என்று உச்ச நீதிமன்றம் மார்ச் 19, 2021ல் கேட்டது உனக்கு நினைவிருக்குமா என்பது!
ஈ.வெ.ரா., மண்ணில் பகுத்தறியத் துாண்டிய சமீபத்திய நிகழ்வு?
'சித்திரை அல்ல; தை முதல் தேதியே தமிழ் புத்தாண்டு' என மாற்ற முயன்ற தி.மு.க., 'திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடும் வழக்கம் முன்னோர் காலத்தில் இருந்தே உள்ளது' என வெளியிட்டிருக்கும் அறிக்கை!
ஈ.வெ.ரா., மண்ணில் உம்மை வதைக்கும் பெரும் துயரம்?
'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு; கொள்கை என்பது இடுப்பில் உள்ள வேட்டி' என்பார் அண்ணாதுரை; தேர்தல் நேரத்து 'வாக்காளர்' பதவியில் மயங்கி, 'என்னிலும் திறன்மிக்கவனே என் தலைவன்' எனும் கொள்கை வேட்டியை தமிழன் இழந்திருப்பது!
சொக்கா... இதெல்லாம் இருக்கட்டும்; ஈ.வெ.ரா., மண்ணில் நான் யார்?
நான் சொன்ன அனைத்தையும் நீ சிந்தித்திருந்தால்... சங்கி; இல்லையெனில், ஹா... ஹா... இந்தா... 1,000 ரூபாய்; நீ மூளைக்காரனப்பா!