
ஆறடி உயரம்; முறுக்கு மீசை!
முன்னே இரு நாய்கள் பாய பின்னே குதிரையில் வில், அம்பு ஏந்தி வேட்டையாடும் வீரன் ஸ்ரீ வேடியப்பன்.
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் செஞ்சி வட்ட எல்லை கிராமமான மழவந்தாங்கலில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில்... வேடியப்பன் செதுக்கப்பட்டிருக்கும் மலை!
சிலையின் கதை வரலாறு சொல்வது: 'ஆநிரை மீட்பு போரில் உயிர்நீத்த போர் வீரனின் நினைவான நடுகல் வகையில் செதுக்கப்பட்டிருக்கும் வேடியப்பன் சிலையின் காலம் கி.பி., 15ம் நுாற்றாண்டு!' - வரலாற்று ஆராய்ச்சியாளர் கோ.செங்குட்டுவன்.
கிராமத்தினர் சொல்வது: வேடியப்பன் எங்க காவல் தெய்வம்; அவர் பார்வையால எங்க வாழ்விடத்துல களவு போறதில்லை! களவாட வந்தவனையும் தன் பக்தனா மாத்தின வரலாறு வேடியப்பனுக்கு உண்டு!
வேடியப்பன் செதுக்கப்பட்டிருக்கும் பாறைக்கு அருகில் உள்ள வற்றாத சுனைநீர் பேரதிசயம். மழவந்தாங்கலோடு மலையரசன் குப்பம், பில்ராம்பட்டு, வேட்டவலம், வீரங்கிபுரம் உள்ளிட்ட கிராமத்தினருக்கு வேடியப்பன் பெரும் தெய்வம்; இவர்களில் சிலருக்கு... குலதெய்வம்.